மாட்டு தொழுவத்தில் கள்ளநோட்டு அடித்த தந்தை, மகன் கைது
மாட்டு தொழுவத்தில் கள்ளநோட்டு அடித்த தந்தை, மகன் கைது
ADDED : ஜன 22, 2025 11:29 PM

மைசூரு: மாட்டு தொழுவத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், டி.நரசிபுராவின் ஹிரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத், 53. இவரது மகன் நாகேஷ், 25. இருவரும் சேர்ந்து கள்ளநோட்டு அச்சிடுவதாக, டி.நரசிபுரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரது வீட்டில் நேற்று போலீசார் சோதனையிட்டனர். பிரசாத்தின் படுக்கை அருகில் இருந்த பெட்டியில், 'எப்சன் கலர் பிரின்டர்' இருந்தது. காகிதம் வெட்டுவதற்கான கட்டிங் ஸ்கேல், காந்தி உருவப்படம், வாட்டர் மார்க், ரூபாய் நோட்டில் இருக்கும் வரியுடன் கூடிய வெள்ளை நிற தாள், மை பாட்டில்கள், 'ஏ 4' பேப்பர்கள் உட்பட கள்ளநோட்டு அச்சிட தேவையான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீட்டின் பின்புறத்தில் இருந்த மாட்டு தொழுவத்தில் வைத்து பணத்தை அச்சிட்டு வந்துள்ளனர். அங்கிருந்த 25,500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை, 'இஸ்பேட் கேம்' விளையாடும்போது, அதில் பந்தயம் கட்டி புழக்கத்தில் விட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தந்தை, மகனிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

