ADDED : மார் 30, 2025 11:35 PM

புதுடில்லி: டில்லியில் ஒரு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்துக்காக, இறப்பு நாடகமாடிய தந்தை மற்றும் மகனை டில்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
டில்லி நஜாப்கர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ககன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரும், இவரின் தந்தையும் சேர்ந்து இன்சூரன்ஸ் பணம் 1 கோடி ரூபாய் பெற திட்டம் போட்டனர்.
வாக்குமூலம்
இதற்காக ககன் தன் பெயரில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான டெர்ம் இன்சூரன்ஸ் எனப்படும் ஆயுள் காப்பீடு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் எடுத்தார்.
கடந்த மார்ச் 5ல் ககன் வாகன விபத்து ஒன்றில் சிக்கியதாக கூறப்படுகிறது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், அருகில் உள்ள சிறிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக வேறு பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக கூறி புறப்பட்டனர்.
ஆனால் மருத்துவமனைக்கே செல்லாமல் ககன் இறந்துவிட்டதாக பொய்யாக அவரின் தந்தை அறிவித்தார். அந்த இறப்பை உண்மை போல் சித்தரிக்க இறுதி சடங்குகள் எல்லாம் செய்யப்பட்டன.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய நபர் ககன் இறந்ததாக கேள்விப்பட்ட தகவலால் பயந்து போய், நஜாப்கர் போலீசிடம் சென்று கடந்த மார்ச் 5ல் விபத்தை ஏற்படுத்தியதாகவும், அதில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
கிடுக்கிப்பிடி
இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது, எந்த விபத்து வழக்கும் அந்நாளில் பதிவாகாததையும், எந்த மருத்துவமனையும் விபத்து இறப்பு குறித்து அறிவிக்கவில்லை என்பதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து இன்சூரன்ஸ் பணத்துக்காக கிளைம் பட்டியல்களை ஆராய்ந்ததில், ககன் பெயரில் ஒரு கோடி ரூபாய் கிளைம் கோரப்பட்டிருந்தது. ககனின் தந்தையிடம் போலீசார் கிடுக்கிப்பிடி கேள்விகள் எழுப்பினர்.
இதையடுத்து மகனுடன் சேர்ந்து பணத்துக்காக இறப்பு நாடகம் நடத்தியதை ஒப்புக்கொண்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.