ஊழியர் டிஸ்மிஸ் உத்தரவு ரத்து; இறந்து 23 ஆண்டுக்கு பிறகு உத்தரவு: குடும்பத்தினர் நெகிழ்ச்சி!
ஊழியர் டிஸ்மிஸ் உத்தரவு ரத்து; இறந்து 23 ஆண்டுக்கு பிறகு உத்தரவு: குடும்பத்தினர் நெகிழ்ச்சி!
ADDED : அக் 06, 2024 02:04 PM

புதுடில்லி: ஊழியர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட உத்தரவை, அவர் இறந்து 23 ஆண்டுகள் கழித்து ரத்து செய்தது டில்லி ஐகோர்ட்.
இந்திய உணவு கழகத்தில் அதிகாரியாக ராம் நரேஷ் டில்லியில் பணியாற்றினார். மத்திய பிரதேசம் மற்றும் தமிழகத்திற்கு தனது நிதி ஆதாயத்திற்காக, தரமற்ற அரிசியை ஏற்றுமதி செய்ததாக, அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவர் தொழில்நுட்ப உதவியாளருடன் கூட்டு சேர்ந்து ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, 1998ம் ஆண்டு, இந்திய உணவு கழகத்தின் உதவி மேலாளர் பதவியில் இருந்து நரேஷ் நீக்கப்பட்டார். 2001ம் ஆண்டு தனது 53 வயதில் நரேஷ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
23 வருடங்கள்!
ஆனால் அவரது குடும்பத்தினர், டில்லி ஐகோர்ட் மற்றும் மேல்முறையீட்டு ஆணையத்தை இரண்டு முறை அணுகினர். 'நரேஷ் ஊழல் செய்யவில்லை, அவரது பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்' என்று டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 25 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. துறை ரீதியாக நடந்த தவறுகளை டில்லி ஐகோர்ட் கண்டுபிடித்தது. இதனால், கடந்த அக்.,01ம் தேதி நரேஷின் பணி நீக்கத்தை டில்லி ஐகோர்ட் நீதிபதிகள் ரத்து செய்தனர். ராம் நரேஷ் பணி நீக்கத்தை அவர் உயிரிழந்து 23 வருடங்களுக்கு பிறகு, டில்லி ஐகோர்ட் ரத்து செய்தது.
மனைவி உருக்கம்
இந்த தீர்ப்பு குறித்து, நரேஷ் மனைவி குஷி கூறியதாவது: இந்த தீர்ப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மை இறுதியாக வெளிவந்துள்ளது. என் கணவர் நிரபராதி என்று முன்பே எனக்கு தெரியும். எங்கள் மீது ஒரு கறை நீக்கப்பட்டது. என் கணவர் எங்கிருந்தாலும், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு பெரிய மோசடி செய்து தனது வேலையில் இருந்து நீக்கப்பட்டார் என்று மக்கள் நினைப்பதை என் கணவர் ஒருபோதும் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.