வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வெளியேறும் பாம்புகளால் அச்சம்
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு வெளியேறும் பாம்புகளால் அச்சம்
ADDED : மார் 16, 2024 10:53 PM
பெங்களூரு: வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பறவைகள், விலங்குகள் பாதித்துள்ளன. பாம்புகள் புதைகுழியில் இருந்து வெளியே வருவதால், மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் வற்றியதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், வெயிலால் பறவைகள், விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
சில தன்னார்வ தொண்டர்கள், நகரில் ஆங்காங்கே பறவைகளுக்காக மரங்களில் சிறியளவில் தண்ணீர் குழவைகள் வைத்துள்ளனர். வெப்பம் அதிகரித்துள்ளதால், குழியில் பதுங்கியிருக்கும் பாம்புகள் வெளியே வர துவங்கி உள்ளன.
இது தொடர்பாக மாநகராட்சி வனவிலங்கு பிரிவு வார்டன் பிரசன்ன குமார் கூறியதாவது:
இம்முறை கோடை காலத்தில் உதவி எண்ணுக்கு அதிக அழைப்புகள் வருகின்றன. பாம்புகளை மீட்கும் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, தினமும் 45 அழைப்புகள் மட்டுமே வந்துள்ளன. தற்போது, ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 அழைப்புகள் வருகின்றன.
சுட்டெரிக்கும் வெயிலால் மைனா உட்பட சில பறவைகள் பறக்கும் போதே கீழே விழுந்து இறக்கின்றன. ராஜராஜேஸ்வரி நகர், எலஹங்கா, தாசரஹள்ளி மண்டலங்களில் இருந்து அதிகளவில் பறவைகள் கீழே விழுந்துள்ளதாக அழைப்புகள் வருகின்றன.
பூங்காக்கள், சமையல் அறைகள் போன்ற குளிர்ச்சியான இடங்களை தேடி பாம்புகள் வருகின்றன. இதற்கு பயப்பட தேவையில்லை. யாரும் பாம்புகளை தாங்களே அடிக்க வேண்டாம். இது பற்றி, மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
கடந்தாண்டை விட, இம்முறை 20 சதவீதம் தொலைபேசி அழைப்புகள் அதிகரித்துஉள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

