ADDED : மே 24, 2025 09:41 PM

பாலக்காடு : பாலக்காடு அருகே, கோவை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திடீரென பள்ளம் ஏற்பட்டதால், வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் வழியாக செல்லும், கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆலத்தூர் சந்திப்பு பகுதியில் நேற்று அதிகாலை திடீரென, ரோடு உள்வாங்கியது. இதனால், அங்கு பெரும் பள்ளம் ஏற்பட்டதால், வாகன ஓட்டுநர்கள் அச்சமடைந்தனர்.
அப்பகுதியில், சாலையின் மறுபுறம் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு குழி தோண்டியதால், மழைநீருக்கு மண் அரிப்பு ஏற்பட்டு, திடீர் பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அப்பகுதி வழியாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. சிறுபாலம் கட்டும் பணி முடிந்த பின், போக்குவரத்து துவங்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால், அங்கு மாற்றுப்பாதையில் போக்குவரத்து இயக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில், தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எதிராக, கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்நிலையில், பாலக்காடு அருகே, சிறுபாலம் பணியால், தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது விவாத பொருளாகியுள்ளது.