பெங்களூரில் 1ம் வகுப்புக்கு ரூ.7.35 லட்சம் கட்டணம்
பெங்களூரில் 1ம் வகுப்புக்கு ரூ.7.35 லட்சம் கட்டணம்
ADDED : செப் 01, 2025 12:34 AM

பெங்களூரு: பெங்களூரில் உள்ள சர்வதேச பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவருக்கு ஆண்டு கல்வி கட்டணமாக, 7.35 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச பள்ளி கர்நாடக மாநிலம், பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் ஹர்திக் பாண்டியா எனும் பெயரில், அடிக்கடி கருத்துகள் பதிவிடுவது வழக்கம்.
சமீபத்தில் இவர் வெளியிட்ட பதிவு:
பெங்களூரில் உள்ள, 'நீவ் அகாடமி' எனும் சர்வதேச பள்ளியில், ஒன்றாம் வகுப்பு மாணவருக்கு ஆண்டு கல்வி கட்டணமாக, 7.35 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையை, இரண்டு தவணையாக வசூலிக்கின்றனர்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு, 7.35 லட்சம் ரூபாய், பிளஸ் 2 மாணவருக்கு, 11 லட்சம் ரூபாய் கட்டணம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்பம், 1,000 ரூபாயும், அட்மிஷனுக்கு, 1 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், எக்காரணம் கொண்டும் அட்மிஷன் தொகை திருப்பி தரப்படாது என்பதே. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பெருமை பள்ளி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்ட கல்வி கட்டணம் குறித்த அட்டவணை படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிலர், 'தங்கள் பிள்ளைகளை அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில், படிக்க வைப்பதே பெருமை என நினைக்கும் பெற்றோரால் வந்த வினை தான் இது' என, கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.