உதவியற்றவர்களாக உணர்கிறோம் : அமித் ஷாவுக்கு கோல்கட்டா பெண் டாக்டரின் தந்தை கடிதம்
உதவியற்றவர்களாக உணர்கிறோம் : அமித் ஷாவுக்கு கோல்கட்டா பெண் டாக்டரின் தந்தை கடிதம்
UPDATED : அக் 22, 2024 08:24 PM
ADDED : அக் 22, 2024 08:17 PM

கோல்கட்டா: கோல்கட்டாவில் ஆர்ஜி கர் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: உங்களை சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் கூறும் இடத்தில்,சொல்லும் நேரத்தில் சந்திக்க தயாராக உள்ளேன். எங்கள் மகளுக்கு நடந்த கொடூரமான எதிர்பாராத சம்பவத்திற்கு பிறகு, நாங்கள் பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறோம். தற்போது உதவியின்றி ஆதரவு அற்றவர்களாக உணர்கிறோம்.
நானும் எனது மனைவியும் உங்களை சந்தித்து சில விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவும், தற்போது இருக்கும் சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்று உங்களின் வழிகாட்டுதலை பெறவும் விரும்புகிறோம். உங்களுடன் பேசுவதற்கான வாய்ப்பை நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம். உங்களுடைய அனுபவமும் வழிகாட்டுதலும் எங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
எங்களுக்காக நீங்கள் எப்போது, எங்கே சில நிமிடங்கள் ஒதுக்கலாம் என்பதை தெரியபடுத்தவும். அதன் மூலம் நாங்கள் தயாராகி கொள்கிறோம். இந்த கோரிக்கைக்கான உங்களின் நேரத்தையும் பரிசீலனையையும் நான் பாராட்டுகிறேன். உங்களின் சாதகமாகன பதிலை எதிர்நோக்குகிறேன். உங்களை சந்திப்பதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஆக.,09 ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசுக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றி வரும் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு மேற்கு வங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.