ராகுல் நடவடிக்கையால் அசவுகரியம்: நடவடிக்கை கோரி ராஜ்யசபா தலைவரிடம் பெண் எம்.பி., புகார்
ராகுல் நடவடிக்கையால் அசவுகரியம்: நடவடிக்கை கோரி ராஜ்யசபா தலைவரிடம் பெண் எம்.பி., புகார்
ADDED : டிச 19, 2024 03:20 PM

புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நடந்து கொண்ட விதம் தனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதாக,பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜ்யசபா பெண் எம்.பி., ஒருவர் அவைத்தலைவர் ஜக்தீப் தன்கரிடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நாகலாந்தைச் சேர்ந்த எம்.பி., பாங்னோன் கோன்யக், ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: அம்பேத்கருக்கு எதிராக காங்கிரஸ் செய்த அட்டூழியங்களை கண்டித்து அமைதியான முறையில் போராட்டத்தில் பங்கேற்றேன்.
இதற்காக பதாகைகளுடன் பார்லிமென்ட் வளாகத்தில் நின்று கொண்டு இருந்தேன். மற்ற கட்சி எம்.பி.,க்கள் பார்லிமென்டிற்குள் நுழைவதற்கு ஏதுவாக பாதுகாவலர்கள் வழியை ஏற்பாடு செய்திருந்தனர். திடீரென, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலும், அவரது கட்சி எம்.பி.,க்களும் அந்த வழியாக செல்லாமல் என் அருகில் வந்தனர். ராகுல் என் அருகே வந்து சத்தமாக கோஷம் போட்டார்.
எனக்கு அருகே அவர் நெருங்கி நின்றது எனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது. இதனால், கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். எந்த எம்.பி.,யும் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது. பெண் எம்.பி., ஆகிய நான், எஸ்டி சமுதாயத்தை சேர்ந்தவர். ராகுல் நடவடிக்கையால் எனது கண்ணியமும், சுய மரியாதையும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் பெண் எம்.பி., கூறியுள்ளார்.