பெண் டாக்டர் - நர்ஸ் சண்டை இருவரும் தற்கொலை முயற்சி
பெண் டாக்டர் - நர்ஸ் சண்டை இருவரும் தற்கொலை முயற்சி
ADDED : ஜன 17, 2025 07:09 AM
ஷிவமொகா: பணி விஷயமாக டாக்டர், நர்ஸ் இடையே வாக்குவாதம் நடந்தது. இருவரும் தற்கொலைக்கு முயற்சித்து, ஒரே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
ஷிவமொக்கா, பத்ராவதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் டாக்டராக ஹம்சவேணி, நர்சாக சுகன்யாவும் பணியாற்றுகின்றனர். ஹம்சவேணி நான்கு ஆண்டுகளாகவும், சுகன்யா எட்டு ஆண்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.
சில மாதங்களாக பணி விஷயத்தில், இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அவ்வப்போது இருவரிடையே வாக்குவாதமும் நடந்தது.
நர்ஸ் சுகன்யா, மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து, டாக்டர் ஹம்சவேணிக்கு பல விதங்களில் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
தன் செல்வாக்கை பயன்படுத்தி, டாக்டரை பத்ராவதியில் இருந்து, சன்னியாசி கோடிமக்கா ஆரம்ப சுகாதார மையத்துக்கு இடமாற்றம் செய்ய வைத்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக இந்த மருத்துவமனையில் ஹம்சவேணி பணியாற்றுகிறார். வேறு மருத்துவமனைக்கு வந்த பின்னரும், இவருக்கு போன் செய்து நர்ஸ் சுகன்யா கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் இவரது தொல்லை அதிகரித்ததால், மனம் நொந்த டாக்டர் ஹம்சவேணி, நேற்று அதிகாலை சன்னியாசி கோடிமக்கா ஆரம்ப சுகாதார மையத்தில், விஷ மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்தார்.
இவர் ஷிவமொகாவின் மெக்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார்.
மற்றொரு பக்கம் டாக்டர் ஹம்சவேணி தனக்கு தொந்தரவு கொடுத்தார். அமர்ந்து சாப்பிட கூட விட்டது இல்லை என, குற்றம் சாட்டிவிட்டு, நர்ஸ் சுகன்யாவும் விஷ மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்து, அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவர்கள் குணமடைந்த பின், அவர்களிடம் விசாரணை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.