கஞ்சா கடத்தல் கும்பல் கார் மோதி கலால் துறை பெண் கான்ஸ்டபிள் பலி
கஞ்சா கடத்தல் கும்பல் கார் மோதி கலால் துறை பெண் கான்ஸ்டபிள் பலி
ADDED : பிப் 02, 2026 02:39 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவில் கஞ்சா கடத்தல் கும்பல் ஓட்டி வந்த கார் மோதியதில், கலால் துறை பெண் போலீஸ் கான்ஸ்டபிள் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தெலுங்கானாவின் நிஜாமாபாதுக்கு கடந்த 23ல் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக கலால்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாதவ் நகர் அருகே கலால் துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காரில் வந்த கஞ்சா கடத்தல் கும்பலை, பெண் கான்ஸ்டபிள் சவுமியா தடுத்து நிறுத்தினார். ஆனால், அதிவேகமாக காரை இயக்கிய அந்த கும்பல் சவுமியா மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்து கீழே விழுந்த சவுமியாவை போலீசார் மீட்டு, அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின், நிஜாம் மருத்துவ அறிவியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சவுமியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சவுமியா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், பெண் கான்ஸ்டபிள் இறப்புக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் போலீசுக்கு உத்தரவிட்டார்.
விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கஞ்சா கடத்தலை தடுத்த பெண் கான்ஸ்டபிள் மீது, கடத்தல் கும்பல் காரை மோத செய்து கொன்றது.
'அப்போது, காரில் இருந்து கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் தப்பி சென்றனர். அந்த காரை சோதனையிட்டதில், 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது' என்றார்.

