உளவுத்துறை பெண் அதிகாரி தற்கொலை சக அதிகாரியான காதலன் 'டிஸ்மிஸ்'
உளவுத்துறை பெண் அதிகாரி தற்கொலை சக அதிகாரியான காதலன் 'டிஸ்மிஸ்'
ADDED : ஏப் 23, 2025 02:32 AM

திருவனந்தபுரம்:திருவனந்தபுரத்தில் மத்திய உளவுத்துறை பெண் அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அதற்குக் காரணமான, சக அதிகாரியான அப்பெண்ணின் காதலன் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் மேகா, 24; மத்திய உளவுத்துறை அதிகாரியான இவர், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் பணிபுரிந்து வந்தார். மார்ச் 24ல் சாக்கை பகுதியில், ரயில் மோதி இறந்து கிடந்தார். இதுகுறித்து, பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர்.
மேகா மொபைல் போனில் பேசியபடியே, ரயில் முன் பாய்ந்தது தெரிய வந்தது. கடைசியாக அவரது மொபைல் போனில் பேசியது யார் என்பது குறித்து விசாரணை நடந்தது. மேகாவின் தந்தை மதுசூதனன், பேட்டை போலீசில் கொடுத்த ஒரு புகாரில் கூறியதாவது:
என் மகள் மேகா, கொச்சி விமான நிலையத்தில் தன்னுடன் பணிபுரியும் மத்திய அரசு உளவுத்துறை அதிகாரி சுகாந்த் சுரேஷ் என்பவரை காதலித்து வந்தார். அவர் திருமணம் செய்வதாகக் கூறி, மகளை ஏமாற்றி விட்டார்.
மேலும், மேகாவிடம் இருந்து சுகாந்த் சுரேஷ் லட்சக்கணக்கான ரூபாய் வாங்கியிருந்தார். ஒருமுறை என் மகள் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்து கொண்டார். மேகாவின் தற்கொலைக்கு சுகாந்த் சுரேஷ் தான் காரணம். அவரை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக, போலீசார் விசாரணை நடத்திய நிலையில், சுகாந்த் சுரேஷ் தலைமறைவானார்.
மலப்புரம் மாவட்டம், எடப்பாள் பகுதியில் உள்ள வீட்டைப் பூட்டிவிட்டு, சுகாந்த் சுரேஷ் பெற்றோருடன் தலைமறைவாகி விட்டார்.
இதற்கிடையே, சுகாந்த் சுரேஷ் முன்ஜாமின் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், எடப்பாளில் உள்ள சுகாந்த் சுரேஷின் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் சில ஆவணங்களை கைப்பற்றினர்.
மேகா தற்கொலை வழக்கில், சுகாந்த் சுரேஷின் பங்கு குறித்து கேரள போலீசார் மத்திய உளவுத்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, சுகாந்த் சுரேஷை பணியிலிருந்து 'டிஸ்மிஸ்' செய்து, மத்திய உளவுத்துறை உத்தரவிட்டது.