வீடுகளின் முன் பெண் மாந்த்ரீகம் 'சிசிடிவி' கேமராவில் அம்பலம்
வீடுகளின் முன் பெண் மாந்த்ரீகம் 'சிசிடிவி' கேமராவில் அம்பலம்
ADDED : மார் 19, 2025 09:11 PM

சிக்கபல்லாபூர்; சிக்கபல்லாபூரில், மாயம், மாந்த்ரீகம் செய்யும் பெண், மக்களை அச்சுறுத்துகிறார். இவரிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி, அப்பகுதியினர் போலீசாரிடம் மன்றாடுகின்றனர்.
சிக்கபல்லாபூரின் ஓ.எம்.பி., நகரில் சமீப நாட்களாக பல வீடுகளில் அசம்பாவிதம் ஏற்பட்டது. இங்கு வசிக்கும் ஜெயலட்சுமி என்பவரின் கணவர் ஆரோக்கியமாக இருந்தார்.
திடீரென மயங்கி விழுந்து இறந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், எந்த நோயும் இல்லை என, அறிக்கை அளித்துள்ளனர்.
ஜெயலட்சுமி வீட்டுக்கு முன், அவ்வப்போது மஞ்சள், குங்குமம், மந்திரிக்கப்பட்ட எலுமிச்சை பழம் கிடந்ததாம். யாரோ மாந்த்ரீகம் செய்ததால், கணவர் இறந்ததாக அவர் கூறுகிறார்.
இதுபோன்று, சில வீடுகளின் முன்பாகவும் இத்தகைய பொருட்கள் போடப்படுகின்றன.
இதனால் அடுத்தடுத்து ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கின்றன.
இப்பகுதியில் வசிக்கும் சாந்தகுமார் என்பவர் தையல் கடை நடத்துகிறார். இவரது கடை முன்பாகவும், இரவோடு, இரவாக மஞ்சள், குங்குமம், எலுமிச்சைப் பழம் வைக்கப்பட்டிருந்தன. அவரது குடும்பத்தினரும் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
கலக்கமடைந்த சாந்தகுமார், மாந்த்ரீக பொருட்களை வைப்பது யார் என்பதை கண்டுபிடிக்க, தன் கடையில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தினார். நேற்று முன்தினம், கேமராவை ஆய்வு செய்த போது, இவரது எதிர் வீட்டில் வசிக்கும் முனி லட்சுமம்மா, மாந்த்ரீக பொருட்களை போடும் காட்சி பதிவாகி இருந்தது.
சாந்தகுமார் கடை மட்டுமின்றி, பல வீடுகளில் இந்த பொருட்களை வைத்ததும் முனி லட்சுமம்மா என்பது தெரிந்தது.
அவர் மீது சிக்கபல்லாபூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அவரை கைது செய்து தங்களை காப்பாற்றும்படி மன்றாடுகின்றனர். போலீசாரும் விசாரணையை துவக்கி உள்ளனர்.