பண்டிகை கால ஆன்லைன் விற்பனை ரூ.1 லட்சம் கோடி; கடந்த ஆண்டை விட 23 சதவீதம் அதிகம்!
பண்டிகை கால ஆன்லைன் விற்பனை ரூ.1 லட்சம் கோடி; கடந்த ஆண்டை விட 23 சதவீதம் அதிகம்!
ADDED : நவ 04, 2024 09:36 AM

புதுடில்லி: கடந்த வாரம் முடிவடைந்த ஒரு மாத கால பண்டிகை சீசனில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இது கடந்தாண்டு விற்பனையை காட்டிலும் 23 சதவீதம் அதிகம்.
தற்போது உலகம் ஆன்லைன் உலகமாகி விட்டது. எதை வாங்க வேண்டும் என்றாலும் ஒரு மொபைல் போன் போதும். மக்களும் எந்த பொருள் ஆர்டர் செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களை நம்பி இருக்கின்றனர். ஆர்டர் செய்து 24 மணிநேரத்துக்குள் வீடு தேடி வரும். இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது மூத்த குடிமக்களும் ஆன்லைன் விற்பனையை அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளனர்.
பண்டிகை காலத்தில், விற்பனையை பட்டையை கிளப்ப, ஆன்லைன் வர்த்தக தளங்கள் உச்சபட்ச தள்ளுபடி, மெகா சலுகைகளுடன் பொருட்கள் விற்பனையை தொடங்குவது வழக்கம். கடந்த வாரம் வியாழன் அன்று தீபாவளி பண்டிகை பர்சேஸ் அமோகமாக இருந்தது. கடந்த வாரம் முடிவடைந்த ஒரு மாத கால பண்டிகை சீசனில், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு பொருட்களை விற்பனை செய்திருந்தன.
இது முந்தைய ஆண்டின் தீபாவளி பண்டிகை கால விற்பனையை காட்டிலும் 23 சதவீதம் அதிகம்.
கடிகாரங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் குழந்தைகள் ஆடைகள் விற்பனை அமோகமாக இருந்தது என அமேசான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.81 ஆயிரம் கோடி; 2022ம் ஆண்டு ரூ.69,800 கோடி ஆகும்.
இந்த ஆண்டு பண்டிகை சீசனில் முதல் வாரத்தில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் மற்றும் அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவலின் போது மட்டும் ரூ.55 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.