2024ம் ஆண்டில் பெங்களூரில் குற்ற சம்பவங்கள் குறைவு! கண்காணிப்பு கேமரா, போலீஸ் ரோந்தால் சாதனை
2024ம் ஆண்டில் பெங்களூரில் குற்ற சம்பவங்கள் குறைவு! கண்காணிப்பு கேமரா, போலீஸ் ரோந்தால் சாதனை
ADDED : ஜன 01, 2025 12:58 AM

பெங்களூரு: கடந்த 2023ம் ஆண்டை காட்டிலும் 2024ம் ஆண்டு, பெங்களூரில் குற்ற சம்பவங்கள் குறைந்து உள்ளன. நகரின் பல இடங்களிலும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியது, போலீசாரின் இரவு நேர ரோந்து பணியால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
பொதுவாக ஒரு நகரம் வேகமாக வளர்ச்சி அடையும் போது, அங்கு குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கும் என்று சொல்வது உண்டு.
அதுபோல பெங்களூரு இன்று உலக அளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நகரில் தினமும் ஏதாவது ஒரு குற்றச் சம்பவங்கள் நடக்கிறது. பெரும்பாலும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் தான் அடிக்கடி நடக்கின்றன.
குற்றச்சம்பவங்களை தடுக்க நகரின் முக்கிய பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும்.
போலீசாரை இரவு நேரத்தில், கட்டாய ரோந்து பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று, பொதுமக்களிடம் இருந்து போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு கோரிக்கைகள் வந்தன.
பி.ஜி.,யில் திருட்டு
இதையடுத்து நகரின் முக்கிய பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஹொய்சாளா ரோந்து வாகனத்தில், போலீசார் இரவில் ரோந்தில் ஈடுபட்டனர்.
இதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. 2023ம் ஆண்டை விட 2024ல் குற்ற சம்பவங்கள் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரு நகரில் அடிக்கடி நடக்கும் திருட்டு வழக்குகளில் பெரும்பாலான வழக்குகள் பி.ஜி., எனும் தங்கும் விடுதிகளில் நடப்பது தான். அங்கு தங்கி இருப்பவர்கள் தாங்கள் பயன்படுத்தும் மடிக்கணினிகள், மொபைல் போன்களை அப்படியே, படுக்கை மீது வைத்து விட்டு செல்கின்றனர். உள்ளே நுழையும் திருடர்கள் எளிதாக திருடி செல்கின்றனர்.
இதனை தடுக்க பி.ஜி.,க்களில் கண்காணிப்பு கேமரா, கட்டாயம் பொருத்த வேண்டும் என்று கூறினோம்.
மொபைல் போன் ஒருவரிடம் இருந்து திருடப்படும் போது, சி.ஐ.ஆர்., போர்டலில் சென்று மொபைல் போனை, வேறு யாரும் பயன்படுத்தாத மாதிரி தடுக்க செயலி அறிமுகப்படுத்தி இருந்தோம். இதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த செயலியை பயன்படுத்தினால், மொபைல் எந்த டவரில் உள்ளது என்று எளிதாக தெரிந்து விடும்.
குண்டர் சட்டம்
இதனால் எளிதில் கைதாகி விடுவோம் என்ற பயத்தில், மொபைல் போன் திருடர்கள், மொபைல் போன்களை திருடும் முயற்சியை கைவிட ஆரம்பித்தனர்.
ஒவ்வொரு குற்றச் சம்பவங்களையும் தடுக்க, ஒவ்வொரு யுக்தியை பயன்படுத்தி வருகிறோம். நகரின் முக்கிய பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து, குற்றவாளிகளை எளிதில் பிடித்து விடுகிறோம். நகரில் தினமும் இரவு ரோந்து பணியில் கட்டாயம் ஈடுபடும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளோம்.
இதன்மூலம் இரவில் நடக்கும் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் வழக்குகள் குறைந்து உள்ளன.
ரவுடிகள் வீடுகளில் அடிக்கடி சோதனை நடத்தி, ஆயுதங்களை பறிமுதல் செய்வதுடன் எச்சரிக்கை விடுக்கிறோம். தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்கிறோம்.
இதுபோன்ற காரணங்களால் குற்ற சம்பவங்கள் குறைந்து இருக்கலாம். வரும் ஆண்டுகளில் குற்றங்களை மேலும் குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.