ADDED : நவ 08, 2024 01:58 PM

மும்பை: 'மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் பிரேக் இல்லாத வாகனம். அங்குள்ள அனைவரும் டிரைவர் இருக்கையில் அமர போராடுகிறார்கள்' என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக, வரும் நவ.,20ம் தேதி நடக்கிறது. துலே மாவட்டத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கவில்லை. சட்டசபை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி கட்சிக்கு மக்கள் ஓட்டளிப்பார்கள். மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் சக்கரங்கள் மற்றும் பிரேக் இல்லாத வாகனம். அங்குள்ள அனைவரும் டிரைவர் இருக்கையில் அமர போராடுகிறார்கள்.
நல்லாட்சி
மஹாராஷ்டிரா மாநில வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எங்கள் கூட்டணி ஆட்சி மாநிலத்தில் வளர்ச்சியை உறுதி செய்யும். நாங்கள் மக்களை கடவுளின் இன்னொரு வடிவமாக கருதுகிறோம். ஆனால் சிலர் மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதற்காக அரசியலில் உள்ளனர். மஹாராஷ்டிரா மக்கள் எனக்கு முழு மனதுடன் ஆதரவு தருகிறார்கள். மஹாராஷ்டிராவில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி ஆட்சியில் மட்டுமே நல்லாட்சி வழங்க முடியும்.
அதிகாரம்
தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் முன்னேறும் போது காங்கிரசால் பொறுத்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் அதிகாரம் பெறுவதை காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகள் விரும்புவதில்லை. காங்கிரஸ் இப்போது பழங்குடியினர் மற்றும் பிற சமூகத்தை சேர்ந்தவர்களை ஒருவரையொருவர் மோத வைக்க முயற்சி செய்கிறார்கள். இது மிகப்பெரிய சதி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.