தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தோல்வியை தழுவிய படங்கள்; கேள்வியால் கமலுக்கு வந்தது கோபம்!

தோல்வியை தழுவிய படங்கள்; கேள்வியால் கமலுக்கு வந்தது கோபம்!

தோல்வியை தழுவிய படங்கள்; கேள்வியால் கமலுக்கு வந்தது கோபம்!


UPDATED : பிப் 09, 2026 01:43 PM

ADDED : ஜன 19, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2026 01:43 PM ADDED : ஜன 19, 2026 06:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என்.டி.டி.வியில் அப்போது வேலை. விஜய் டிவியில் வரும் செய்திகளை எங்கள் டிவிதான் தயாரித்துக் கொண்டிருந்தது. ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்திகள். நானும் பிரபல ஆல் இந்தியா ரேடியோ செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமியும் தமிழ் செய்திகளை கவனித்துக் கொண்டோம்.

என்.டி.டி.வியில் வரும் ஆங்கில செய்திகளை நாராயணசாமி தமிழில் மொழி பெயர்த்து வாய்ஸ் தருவார். பார்லிமென்ட் நடவடிக்கைகள், டில்லிக்கு வரும் தமிழக அமைச்சர்கள், விருதுகள் என பலவற்றை நான் பார்த்துக் கொண்டேன்.

என் செய்திகளுக்கு தமிழில் ஸ்கிரிப்ட் எழுதி நானே வாய்ஸ் கொடுப்பேன். ஒரு நாள் வேலை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு படுக்க தயாரான சமயம் போன் வந்தது.

“இன்னைக்கு ராத்திரி ஒரு 11 மணிக்கு ஆபீஸ் வர முடியுமா...,” அலுவலகத்திலிருந்து திடீர் அழைப்பு.

“இன்றைக்கு செய்திகள் முடிந்து விட்டதே…ஏதாவது முக்கிய செய்தி ரிகார்ட் செய்யணுமா” என கேட்டேன்.

“ ஒரு விஐபி இன்றைக்கு இரவு ஸ்டூடியோவிற்கு வருகிறார். உங்க ஊர்க்காரர்...”

ஆச்சர்யமானேன். “ நான் என்ன செய்யணும்?”

“அவருக்கு தமிழ் நியூஸ் பற்றி கொஞ்சம் தெரியனும்... நீ வந்தால் நன்றாக இருக்கும்னு அவர் சொல்கிறார்...”

“யார் அந்த விஐபி?”

“நீங்கள் ஆபீஸுக்கு வரும் போது தெரியும்” என சஸ்பென்சாக போனை வைத்துவிட்டார்கள்.

யாராக இருக்கும்? ஏதாவது அரசியல்வாதியா? அவர் ஏன் இரவு நேரத்தில் நம்ம ஸ்டூடியோவிற்கு வரப் போகிறார்? வேறு யாராக இருக்கும்? மண்டை குழம்பியது

அட இவரா?



யார் அந்த விஐபி என்கிற சஸ்பென்சுடன் ஆபீஸுக்குப் போனேன். இரவு 10.30 மணி

என்.டி.டி.வியின் ஆபீஸ், ஸ்டூடியோ எல்லாமே அர்ச்சனா ஷாப்பிங் காம்பிளக்சில் உள்ளது. காம்பவுண்டிற்குள் பல கார்கள் நின்றிருந்தன. இந்த இரவு நேரத்தில் இவ்வளவு வண்டிகளா?

ஒரு பெரிய டிரக்கும் இருந்தது. அதில் ஜெனரேட்டர். அதிலிருந்து பல கேபிள்கள் வெளியேறி படிக்கட்டுகள் வழியாக முதல் மாடியில் உள்ள ஸ்டூடியோவிற்குள் சென்றன.

நிறைய பேர் உள்ளே போவதும் வெளியே வருவதுமாக இருந்தனர். ஒரு சிலர் பெரிய லைட்களை தூக்கிக் கொண்டு முதல் மாடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

'ஸ்டூடியோவில்தான் லைட் இருக்கிறதே, எதற்கு மேலும் இவ்வளவு பெரிய லைட்கள்' என சந்தேகம் எழுந்தது.

என்னை போனில் அழைத்த அலுவலக நண்பர் எதிர்பட்டார்.

“ஓகே வந்தாச்சா. கொஞ்ச நேரம் உங்க சீட்ல உட்காருங்க…அவர் வந்துவிடுவார்” என்றார்.

“இப்பவாவது அது யாருன்னு சொல்லக் கூடாதா”

ஒரு புன்சிரிப்புடன் சென்றுவிட்டார் அவர்.

இரண்டாவது மாடியில் உள்ள என் சீட்டிற்கு சென்று அமர்ந்தேன். சும்மா எப்படி உட்கார்ந்திருப்பது? கம்ப்யூட்டரைத் தட்டி எழுப்பினேன்.

சுமார் அரை மணி நேரம் ஆகியிருக்கும். போன் செய்த அந்த நண்பர் வந்தார். அவருக்கு பின்னால் யாரோ வருவது தெரிந்தது. ஆனால் முகம் சரியாக தெரியவில்லை.

“இவர்தான் வைத்யா... தமிழ் நியூஸ் பார்த்துக் கொள்கிறார்,” என பக்கத்திலிருந்தவருக்கு என்னை அறிமுகப்படுத்த, பக்கத்திலிருந்தவர் இப்போது என் முன் வந்தார்.

அட இவரா? என்ன ஆச்சரியம்.

வந்தவர் கமல்ஹாசன்.

ஆளவந்தான்


சிவந்த முகம்…இறுக்கமான அரைக் கை சட்டை.

ஹலோ என அவர் கை நீட்ட உடனே கை குலுக்கினேன்.

“உங்களுக்கு என்ன உதவி தேவை என்றாலும் வைத்யா செய்வார்” என சொல்லி நண்பர் சென்றுவிட்டார்.

எதிரே இருந்த நாற்காலியைக் காட்டி கமலை உட்காரச் சொன்னேன்.

பள்ளி, கல்லூரி காலங்களில் கமல் படம் ஒன்றை விடாமல் பார்த்த நான் இப்போது நேரடியாகப் பார்க்கிறேன்.

'ஆளவந்தான்' பட ஷூட்டிங்கிற்காக டில்லி வந்துள்ளதாக சொன்னார் கமல். அதில் ரவீணா டாண்டன் ஹீரோயின். அவர் ஒரு செய்தியாளர். டிவியில் செய்தி வாசிப்பவர் என மேலும் விவரங்களைச் சொன்னார்.

என் வேலையைப் பற்றிக் கேட்டார். சொன்னேன்.

“நீங்க எழுதின ஸ்கிரிப்டைக் காட்டுங்களேன். என் பட ஹீரோயின் நியூஸ் ஆங்கர். நீங்க எழுதின ஏதாவது நியூஸ் அவங்களுக்கு செட் ஆகுதான்னு பார்க்கிறேன்” என்றார் கமல்.

செய்தி எழுதிய சில ஸ்கிரிப்ட்களை பிரிண்ட் அவுட் எடுத்து அவரிடம் கொடுத்தேன். இங்கே ஸ்கிரிப்ட் என்பது ஒரு பக்கம்தான் இருக்கும். அதிலும் செய்தி என்பது முக்கால் பக்கம்தான்.

மணி இரவு 11.30. பொறுமையாக ஒவ்வொன்றாக படித்தார் கமல்.

“இது எங்களுக்கு ஒத்து வரும் என நினைக்கிறேன்” என ஒரு பக்கத்தை எனக்கு காட்டினார்.

லாலு பிரசாத் யாதவ் பற்றிய செய்தி அது.

நானும் சரி என தலையாட்டினேன்.

“ரவீணா எப்படி தமிழ் படிப்பார்?”

“படிக்கிற மாதிரி காட்ட வேண்டியதுதான். டப்பிங்தானே” என்றார் கமல்.

எழுந்தவர் கை குலுக்கிவிட்டு நன்றி சொல்லிவிட்டு சென்றார்.

கம்ப்யூட்டரை மூடிவிட்டு சிறிது நேரத்தில் கீழே இறங்கினேன். ஸ்டூடியோவிற்குள் என்ன நடக்கிறது என பார்க்க சென்றேன். எங்களுடைய ஆங்கர் உட்காரும் இடத்தில் ரவீணா உட்கார்திருந்தார். எதிரே காமிரா, லைட் என ஆட்கள் அதிகமாக இருந்தனர். இப்படியாக படப்பிடிப்பு நடந்தது.

இதற்கு பிறகு ஒரு முறை கமலை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறேன். 'அன்பே சிவம்' படம் டில்லியில் பிரிவியூ நடந்தது.

அதற்கு போயிருந்தேன். இடதுசாரி தலைவர் சீத்தாராம் யெச்சூரியும் அவரது மனைவியும் வந்திருந்தார்கள். அவர்களுடன் தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார் கமல்.

அப்போது பேட்டி எடுத்தேன். 'உங்கள் கம்பெனி படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறதே' என்ற என் கேள்விக்கு ரொம்ப கோபப்பட்டார். அதற்கு பிறகு அவரைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

- அ.வைத்தியநாதன்Image 1523865

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.

தொடர்புக்கு: vaithi@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us