இறுதி கட்டம் ! பீஹாரின் 122 தொகுதிகளில் நாளை தேர்தல் : முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியாகின்றன
இறுதி கட்டம் ! பீஹாரின் 122 தொகுதிகளில் நாளை தேர்தல் : முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியாகின்றன
ADDED : நவ 10, 2025 02:31 AM

பாட்னா: பீஹாரிலுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு நாளை, இரண்டாம் மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கான பிரசாரங்கள் நேற்று மாலையுடன் ஓய்ந்தன. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியினர் முதல் கட்ட தேர்தல் அனுபவத்தை பயன்படுத்தி இறுதி கட்ட தேர்தலில் கூடுதல் இடங்களை பெறும் முனைப்புடன் காணப்பட்டனர். பீஹார் சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 22ல் முடிவடைகிறது. மொத்தம், 243 தொகுதிகள் கொண்ட இம்மாநில சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இங்கு, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், பா.ஜ., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்து, 'மஹாகட்பந்தன்' என்ற கூட்டணியை அமைத்துள்ளன.
சூறாவளி சுற்றுப்பயணம் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற தவிப்புடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்ற கனவுடன் மஹாகட்பந்தன் கூட்டணியும் களம் இறங்கியுள்ளன.
முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6ம் தேதி தேர்தல் நடந்தது. இதில், பீஹார் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாக 65.08 சதவீத ஓட்டுகள் பதிவாகின.
'அதிக ஓட்டுப்பதிவு ஆளுங்கட்சிக்கு ஆதரவான சமிக்ஞை' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். முதல் கட்ட தேர்தலில் 100 தொகுதிகள் பெறுவோம் என, பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறினார்.
அதே சமயம் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர், அதிக ஓட்டுப்பதிவானது ஆட்சிக்கு எதிரான அலையாகவும், மாற்றத்திற்கான ஓட்டுகள் என்றும் கொண்டாடினர்.
இந்நிலையில், 20 மாவட்டங்களில் உள்ள 122 தொகுதிகளில் நாளை இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. பிரதமர் மோடி அவுரங்காபாத், பாபுவா உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு சேகரித்தார்.
மஹாகட்பந்தன் தரப்பில் முதல்வர் வேட்பாளராக உள்ள தேஜஸ்வி யாதவ் அனைத்து தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காங்கிரஸ் சார்பில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பாகல்பூர், கிஷன்கஞ்ச் உள்ளிட்ட இடங்களில் ஓட்டு சேகரித்தார்.
கூடுதல் பாதுகாப்பு மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் அதிகரித்துள்ள பிரச்னையை தேசிய ஜனநாயக கூட்டணி, முன்னிறுத்தியது. மஹாகட்பந்தன் கூட்டணி தலைவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் மாற்றத்தை வலியுறுத்தினர்.
இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 1,306 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில், 136 பேர் பெண்கள். இந்த தேர்தலில், 3.7 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். அவர்களுக்காக 45,000க்கும் மேற்பட்ட இடங்களில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசியல் பரபரப்பு உடைய பூர்ணியா, அராரியா, கிஷன்கஞ்ச், கதிஹார் ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாஞ்சல் பிராந்தியத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு, முஸ்லிம்களின் எண்ணிக்கை 17 சதவீதமாக உள்ளது.
கடந்த 2020 சட்டசபை தேர்தலின் போது இந்த 122 தொகுதிகளில் பா.ஜ., 42; நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 20 இடங்களை வென்றன. எதிர்க்கட்சிகளான ராஷ்ட்ரீய ஜனதா தளம் 33; காங்கிரஸ் 11; இடதுசாரிகள் ஐந்து இடங்களை வென்றன.
இந்த முறை யாருக்கு எத்தனை இடங்கள், ஆட்சி அமைக்க போவது யார் என்பது ஓட்டு எண்ணிக்கை நாளான நவம்பர் 14ல் தெரிய வரும்.

