மத்திய பட்ஜெட் டில்லிக்கு நயா பைசா தரவில்லை நிதி அமைச்சர் அதிஷி காட்டம்
மத்திய பட்ஜெட் டில்லிக்கு நயா பைசா தரவில்லை நிதி அமைச்சர் அதிஷி காட்டம்
ADDED : ஜூலை 23, 2024 08:56 PM

புதுடில்லி:“மத்திய அரசின் பட்ஜெட்டில் தலைநகர் டில்லி அரசுக்கு கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்த 1,168 கோடி ரூபாயே இந்த ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நயா பைசா கூட அதிகரிக்கவில்லை,”என, டில்லி நிதி அமைச்சர் அதிஷி சிங் கூறினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024 -2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.
இதுகுறித்து, டில்லி நிதி அமைச்சர் அதிஷி சிங் கூறியதாவது:
மத்திய அரசின் பட்ஜெட்டில் டில்லி அரசுக்கு 1,168 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே தொகைதான் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நயா பைசா கூட உயர்த்தப்படவில்லை.
கடந்த 2022 - 20-23ம் ஆண்டு பட்ஜெட்டில் டில்லிக்கு 960 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதுவே, 2023 - 20-24ல் 1,168 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே தொகையை அறிவித்துள்ளனர்.
டில்லிக்கான மத்திய வரிகள் மற்றும் மானியங்கள் எதுவும் இல்லை. இது 2022 - 20-23ம் ஆண்டு பட்ஜெட்டில் 325 கோடியாக இருந்தது.
டில்லி அரசு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 20,000 கோடியும், டில்லி மாநகராட்சி வரியாக மத்திய அரசுக்கு செலுத்திய 2.32 லட்சம் கோடியில் 10 சதவீதத் தொகையை டில்லிக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால், பட்ஜெட்டில் நயா பைசா கூட ஒதுக்கவில்லை.
டில்லி அரசு 40,000 கோடி ரூபாயில் டில்லி மக்களுக்கு சர்வதேச தரத்தில் பள்ளிகள், இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மொஹல்லா கிளினிக்குகள் ஆகிய வசதிகளை செய்துள்ளது.
கடந்த 11 பட்ஜெட்களில் டில்லி அரசுக்கு மத்திய அரசு செய்த ஒரு விஷயத்தையாவது பா.ஜ., நிரூபிக்க வேண்டும்.
டில்லி அரசு 25,000 கோடி ரூபாய் மத்திய ஜி.எஸ்.டி. செலுத்துகிறது. மத்திய அரசுக்கு 2.32 லட்சம் கோடி வரி செலுத்தி இருந்தாலும், நாங்கள் கேட்டது வெறும் 20,000 கோடி ரூபாய்தான். இது மத்திய பட்ஜெட் தொகையில் 0.4 சதவீதம் மட்டும்தான்.
பா.ஜ., தன் அரசைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதில் நாட்டு மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்..
மானியம் குறைப்பு
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான் சஞ்சய் சிங் கூறியதாவது:
இது, குழந்தைகளுக்கான பொம்மை பட்ஜெட். விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு எந்த திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. அரசைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே இந்த பட்ஜெட்டை பா.ஜ., பயன்படுத்தியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் வெள்ள பாதிப்புக்கு சிறப்பு நிதி அறிவித்த நிர்மலா சீதாராமன், பஞ்சாப் மாநிலத்தைப் பற்றி வாய் திறக்கவே இல்லை. பஞ்சாபில் வெள்ளத்தால் ஏராளமான பயிர்கள் மற்றும் சொத்துக்கள் சேதம் அடைந்தன. அதேநேரத்தில், பஞ்சாப் மாநிலத்தின் உர மானியம் 25,000 கோடி ரூபாயில் இருந்து 16,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. உரம், பூச்சிக் கொல்லி, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் நடத்தியும் கூட, பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.