ADDED : பிப் 08, 2025 01:40 AM

மஹா கும்ப நகர் உத்தர பிரதேசத்தில் மஹா கும்பமேளா நடைபெறும் இடத்தில், நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் திரிவேணி சங்கமம் பகுதியில், கடந்த மாதம் 13ம் தேதி மஹா கும்பமேளா துவங்கியது.
இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் இங்கு நீராடி வருகின்றனர்.
மஹா கும்பமேளா நடைபெறும் பகுதியில், கிருஷ்ணர் வழிபாட்டுக்கான சர்வதேச சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட முகாமில், நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது.
உடனே, சம்பவ இடத்திற்கு 12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
காற்று வேகமாக வீசியதால், அருகில் உள்ள முகாம்களுக்கும் தீ பரவியது. நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிரிழப்பு, காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும், 20க்கும் மேற்பட்ட கூடாரங்கள் சேதமாகின.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் இதேபோல் மஹா கும்பமேளாவில், செக்டார் 19ல் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டு, 18 கூடாரங்கள் சேதமடைந்தன.