ம.பி.,யில் பட்டாசு ஆலையில் பற்றியது தீ: 11 பேர் பலி; 60 பேர் காயம்
ம.பி.,யில் பட்டாசு ஆலையில் பற்றியது தீ: 11 பேர் பலி; 60 பேர் காயம்
UPDATED : பிப் 06, 2024 04:19 PM
ADDED : பிப் 06, 2024 01:51 PM

போபால்: மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்; 60 பேர் காயமுற்றனர். இதில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தா என்ற இடத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று(பிப்.,06) தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் காயமுற்றனர். இதில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த துயர சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து ஒரு கூட்டத்தை நடத்தி, அமைச்சர் உதய் பிரதாப் சிங், டிஜிபி மற்றும் ஊர்க்காவல்படை அரவிந்த் குமார் ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மோகன் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காயமுற்று மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருபவரின் குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நிவாரணம்
இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. மேலும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 6 பேர் கொண்ட குழுவும் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

