டில்லி விமான நிலைய பஸ்ஸில் திடீர் தீ; தப்பியது ஏர் இந்தியா விமானம்
டில்லி விமான நிலைய பஸ்ஸில் திடீர் தீ; தப்பியது ஏர் இந்தியா விமானம்
ADDED : அக் 28, 2025 02:56 PM

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அருகே சென்ற பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையத்தில் ஏர் இந்தியா விமான நிறுத்தப்பட்டிருந்தது.
பயணிகளை விமானத்திற்கு அழைத்துச் செல்லும் அந்நிறுவனத்தின் பஸ் ஒன்று அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, திடீரென அதில் தீப்பற்றி எரிந்துள்ளது. கொளுந்து விட்டு எரிந்த இந்தத் தீயால், பஸ் பெருமளவு எரிந்து நாசமானது.
இதில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமான நிலையத்தின் தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
தீப்பிடித்து எரிந்த பஸ், ஏர் இந்தியா விமானத்தின் அருகே சில மீட்டர் தொலைவிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. நல்வாய்ப்பாக விமானத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

