வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ உரிமையாளர் உட்பட 3 பேர் பலி
வாசனை திரவிய தொழிற்சாலையில் தீ உரிமையாளர் உட்பட 3 பேர் பலி
ADDED : பிப் 19, 2024 07:14 AM

கும்பலகோடு: வாசனை திரவிய தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், உரிமையாளர் உட்பட மூன்று பேர் உடல்கருகி இறந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். ஆட்டோ, கார், பைக் எரிந்து நாசமானது.
பெங்களூரு கும்பலகோடு அருகே ராமசந்திரா கிராமத்தில், ஒரு வீட்டில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த ஒரு மாதமாக, இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5:00 மணிக்கு, அந்த தொழிற்சாலையில் இருந்து, வெடி வெடித்தது போல பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தனர்.
அப்போது தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு படையினர், கும்பலகோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவி, வேகமாக எரிந்தது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த, தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தொழிற்சாலைக்குள் சென்று பார்த்த போது, மூன்று பேர் உடல் கருகி இறந்தது தெரிந்தது. மேலும், ஐந்து பேர் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு, விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த மூன்று பேரில் ஒருவரின் அடையாளம் தெரிந்தது. அவரது பெயர் சலீம். தொழிற்சாலையின் உரிமையாளர் ஆவார். மற்ற இருவர் யார் என்று தெரியவில்லை.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் முன்பு நின்றிருந்த ஒரு ஆட்டோ, பைக், கார் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் கமிஷனர் கார்த்திக் ரெட்டி, போலீசார், அப்பகுதி மக்களிடம் விசாரித்தனர்.
பின்னர் கார்த்திக் அளித்த பேட்டியில், ''தீ விபத்து நடந்த வீடு, விட்டல் என்பவருக்கு சொந்தமானது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, சலீம் என்பவர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து, வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார்.
''தீ விபத்தில் அவரும், மேலும் இருவரும் இறந்து உள்ளனர். ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ரசாயன கசிவு காரணமாக நடந்திருக்கலாம் என்று நினைக்கிறோம். மடிவாளாவில் இருந்து தடய அறிவியல் ஆய்வக குழு வருகிறது. அவர்கள் ஆய்வு செய்த பின்னர் தான், தீ விபத்துக்கான காரணம் தெரியவரும்,'' என்றார்.
அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், 'இங்கு வாசனை திரவிய தொழிற்சாலை இயங்கி வந்ததே, எங்களுக்கு தெரியாது. இந்த வழியாக செல்லும் போது வாசனை வரும். வேறு ஏதோ என்று நினைத்து கொண்டோம். தீ விபத்து நடந்ததும் டமார்... டமார் என்று பயங்கரமாக சத்தம் வந்தது.
'வீடுகளின் மாடிகளில் நின்று நாங்கள் பார்த்தோம். இந்த பகுதி மிகவும் குறுகலானது. தீயணைப்பு வாகனங்கள் எளிதில் வர முடியவில்லை. இந்த இடத்தில் தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்தது, யார் என தெரியவில்லை' என்றனர்.

