பாலக்காட்டில் புலம் பெயர்ந்த பறவைகள் வாழ்விடத்தில் தீ
பாலக்காட்டில் புலம் பெயர்ந்த பறவைகள் வாழ்விடத்தில் தீ
ADDED : பிப் 16, 2025 07:31 AM

பாலக்காடு பாலக்காடு அருகே, புலம் பெயர்ந்த பறவைகளின் வாழ்விடத்தில் மீண்டும் தீப்பற்றி எரிவது, பறவை ஆர்வலர்களை கவலை அடையச்செய்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் மாயன்னுார் பகுதி வாயிலாக கடந்து செல்லும் ஆறு பாரதப்புழை. இங்கு இந்த ஆற்றின் கிழக்கு பகுதியில், ஒன்பது ஏக்கர் பரப்பளவில் உள்ள கரையோரத்தில், குளிர்காலத்தில் புலம் பெயர்ந்த பறவைகள் வருவது வழக்கம்.
இந்தக் குளிர்காலத்திலும் ஏராளமான புலம் பெயர்ந்த பறவைகள் இங்கு வந்துள்ளன. இந்நிலையில் இந்தப் பறவைகளின் வாழ்விடத்தில், மீண்டும் தீப்பற்றிக்கொண்டது பறவை ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது. இது குறித்து, பறவை ஆர்வலர் ஷினோ கூறியதாவது:
கடந்த நான்கு வாரத்தில், ஆறாவது முறையாக தற்போது தீப்பற்றியுள்ளது. புலம்பெயர்ந்த பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கத் தொடங்கியிருந்த நேரத்தில், இங்கு தீப்பற்றி கொண்டதில் கவலை அளிக்கிறது.இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் இதுவரை மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை. தீயை யார் இப்பகுதியில் பற்ற வைக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

