ADDED : மார் 13, 2024 09:57 PM

நொய்டா:புதுடில்லி அருகே நொய்டாவில் ஹோட்டல் மற்றும் அடுத்தடுத்த கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் கருகி சாம்பலாகின.
நொய்டா விரிவாக்கம் ஹிண்டன் ஆறு அருகே, ஒரு ஹோட்டலில் நேற்று காலை 7:00 மணிக்கு மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. அந்த ஹோட்டல் முழுதும் திகுதிகுவென கொழுந்து விட்டு எரிந்தது. சற்று நேரத்தில் அடுத்தடுத்த ஆறு ஹோட்டல்கள் மற்றும் இதர கடைகளுக்கும் பரவியது.
தகவல் அறிந்து, 10 வண்டிகளில் தீயணைப்புப் படையினர் வந்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதற்கிடையில், முதலில் தீப்பற்றிய ஹோட்டலில் ஏராளமான வர்த்தக காஸ் சிலிண்டர்கள் இருந்தன. அவற்றை வெளியே கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
ஆனால், பத்திரமாக அவற்றை வெளியே கொண்டு வந்தனர். அனைத்துக் கடைகளிலும் இருந்த பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின. இந்த சம்பவத்தால் நொய்டாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடில்லி
வடக்கு டில்லி சுப்ஜி மண்டி ரோஷனாரா சாலையில் எலக்ட்ரானிக்ஸ் கடையில் நேற்று தீப்பற்றியது. இந்த விபத்தில், விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த ஏ.சி. இயந்திரம், பிரிட்ஜ், கெய்சர் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்து வீடுகளில் வசிப்போர் வெளியேற்றப்பட்டனர். மூன்று வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரத்தில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவால் தீப்பற்றியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

