நாகரஹொளே வனப்பகுதியில் தீ தடுப்பு கோடு பணி தீவிரம்
நாகரஹொளே வனப்பகுதியில் தீ தடுப்பு கோடு பணி தீவிரம்
ADDED : ஜன 20, 2025 07:07 AM

மைசூரு: நாகரஹொளே வனப்பகுதியில், தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வனத்துறை உதவி அதிகாரி லட்சுமிகாந்த் கூறியதாவது:
நாகரஹொளே வனப்பகுதியின் 2,549 கி.மீ., துாரத்துக்கு, தீ பராமல் இருக்க, வனத்துறை சார்பில் தீ தடுப்பு கோடு அமைத்துள்ளனர். இந்த கோடுகள், வன எல்லையிலும், சாலை ஓரத்திலும் அமைத்து உள்ளனர்.
தீயணைப்பு கட்டுப்பாட்டு துறைக்கு, ஜனவரி முதல் மார்ச் இறுதி வரை கூடுதலாக 400 பணியாளர்கள், துறை மூலம் பணியமர்த்தப்பட்டு, எட்டு மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வனத்துக்குள் 35 கண்காணிப்பு கோபுரங்கள் கட்டி, இரவு, பகலாக இரண்டு ஷிப்ட்களில் தகவல் தருவர். ஒப்பந்த அடிப்படையில் துறை மூலம் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 674 ரூபாய் ஊதியம், பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு 2025 - 26ல் தீ விபத்துகளை கட்டுப்படுத்த அரசு, 2.45 கோடி ரூபாய் மானியம் வழங்கி உள்ளது. இந்த மானியம் ஊழியர்களின் சம்பளம், தீயை கட்டுப்படுத்த தேவையான வாகனங்களின் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். 2020 முதல் வனப்பகுதியில் எங்கெங்கு தீ எரியும் என்பதை கண்டறிய, ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் சரியான இடத்துக்கு நாங்கள் செல்ல உதவுகிறது. தீயை அணைக்க தண்ணீர் தொட்டிகள், இரு சக்கர வாகனங்களுக்கு, 'ஸ்பிரிங்க்ளர்ஸ்' பொருத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.