ADDED : டிச 29, 2024 02:54 AM
திருச்சூர்,கேரளாவில் திருச்சூர் கோவில்களில் வாணவேடிக்கை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கோவில் நிர்வாகங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கோவில் திருவிழாக்களுக்கு பெயர் பெற்ற கேரளாவில், திருச்சூர் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் இந்த திருவிழாவில் யானைகள் ஊர்வலம், வாணவேடிக்கை போன்றவை முக்கிய நிகழ்வாக இருக்கும்.
ஏமாற்றம்
இந்த ஆண்டு நடந்த பூரம் திருவிழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, நள்ளிரவில் நடக்கும் வாணவேடிக்கை நிகழ்ச்சி பகலில் மாற்றப்பட்டது.
இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துவந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், திருச்சூரில் உள்ள பரமேக்காவு, திருவம்பாடி கோவில்களில் அடுத்த மாதம் 'வேல எழுநல்லிப்பு' திருவிழா நடக்கவுள்ளது.
இந்த விழாவின்போது, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்த கோவில் நிர்வாகங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதுகுறித்து கூடுதல் கலெக்டர் வெளியிட்டு உள்ள உத்தரவில், 'மத்திய அரசின் வெடிபொருள் விதிகளில் செய்யப்பட்ட புதிய திருத்தம் மற்றும் மாநில அரசு துறைகளின் அறிக்கைகளின் அடிப்படையில், வாணவேடிக்கை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.
'வாணவேடிக்கை நடத்த உரிய சூழல் இல்லை என்றும், மீறி நடத்தினால் பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
'எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வாணவேடிக்கைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.
இதற்கு பரமேக்காவு மற்றும் திருவம்பாடி கோவில் நிர்வாகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து திருவம்பாடி தேவசம் வாரிய செயலர் கிரிஷ்குமார் கூறியதாவது:
திருச்சூர் பூரம் கோவில் திருவிழாவில் நடத்தப்படும் முறைப்படியே, பரமேக்காவு, திருவம்பாடி கோவில்களில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தற்போது எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு, பூரம் திருவிழாவுக்கு விடுக்கப்படும் முன்னெச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
நாளை அந்த கோவிலிலும் தடை விதிக்கப்படும். தலைமுறை தலைமுறையாக, பாரம்பரிய முறையில் நடத்தப்படும் இந்த விழாவில், வாணவேடிக்கைக்கு அனுமதி மறுக்கப்படுவது வினோதமாக உள்ளது.
அனுமதி மறுப்பது ஏன்?
இத்தனை ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிகழ்ச்சிக்கு இப்போது மட்டும் அனுமதி மறுப்பது ஏன்? இதற்கு எதிராக அரசியல் கட்சியினர் குரல் எழுப்ப வேண்டும்.
இதே விழாவில் இடம்பெற இருந்த யானை ஊர்வலத்துக்கு தடை கோரப்பட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம், பாரம்பரிய சடங்குகளை பாதுகாக்க, கோவில் அதிகாரிகள் நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

