அந்தப் பேச்சுக்கே இடமில்லை; பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி காட்டிய பிடிவாதம்
அந்தப் பேச்சுக்கே இடமில்லை; பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி காட்டிய பிடிவாதம்
ADDED : அக் 23, 2024 04:52 PM

காசான்: தீவிரவாதத்தை தடுப்பதில் இரட்டை நிலைப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
16வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். காசான் நகரில் நடந்த இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, மேற்கு ஆசியா மற்றும் உக்ரைனில் நடந்து வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதை வலியுறுத்தி பேசினார்.
அவர் பேசியதாவது: இந்தியா போரை ஆதரிக்கவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே நாங்கள் விரும்புகிறோம். தீவிரவாத தாக்குதல்களுக்கும், தீவிரவாத செயல்களுக்காக நிதி திரட்டுவதையும் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது. இளைஞர்களை தீவிரவாத செயல்களுக்காக ஈர்ப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்த ஐ.நா.,வின் விரிவான மாநாட்டில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
பணவீக்கம், உணவு பாதுகாப்பு, சைபர் அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவை சர்வதேச சவால்களாக இருந்து வருகின்றன. எனவே, இந்த விவகாரங்களில் அனைத்து நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், பலதரப்பு வளர்ச்சி வங்கிகள் (எம்.டி.பி.,) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (டபுள்யூ.டி.ஓ.,) உள்ளிட்ட உலகளாவிய நிறுவனங்களை மறுசீரமைக்க பிரிக்ஸ் மாநாட்டு உறுப்பு நாடுகள் குரல் கொடுக்க வேண்டும், என வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தை தொடர்ந்து, சீன பிரதமர் ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்த பேச திட்டமிட்டுள்ளார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசுவது இது முதல்முறையாகும். எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்த விவகாரத்தில் இரு நாடுகளிடையே மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.