தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ குட்டு!

குட்டு!

குட்டு!


UPDATED : மே 02, 2026 06:20 PM

ADDED : மே 02, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2026 06:20 PM ADDED : மே 02, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- டில்லி சிறப்பு நிருபர் -: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை பணியில், மாநில அரசு ஊழியர்களை நியமிக்கக் கோரி, ஆளும் திரிணமுல் காங்., தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. 'யாரை நியமிக்க வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் முடிவு. அதில் தலையிட முடியாது' எனக் கூறி, அக்கட்சிக்கு நீதிமன்றம் மீண்டும் குட்டு வைத்துள்ளது.

-

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமுல் காங்., - எதிர்க்கட்சியான பா.ஜ., இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த சூழலில், ஓட்டு எண்ணிக்கை பணியில் மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக நியமித்து, கடந்த 13ல், தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளும் திரிணமுல் காங்., கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ஓட்டு எண்ணிக்கை பணியில் யாரை வேண்டுமானாலும் தேர்தல் கமிஷன் நியமிக்கலாம்' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் திரிணமுல் காங்., மேல்முறையீடு செய்தது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில், அவசர வழக்காக நேற்று விசாரணைக்கு வந்தது

அப்போது, திரிணமுல் காங்., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த வாதம்:

ஓட்டு எண்ணிக்கை பணியில் மத்திய அரசின் ஊழியர்களை நியமிக்கும் சுற்றறிக்கை, ஏப்., 13-ம் தேதியே வெளியிடப்பட்டது. ஆனால், ஏப்., 29ல் தான் எங்களுக்கு தெரிய வந்தது. ஓட்டு எண்ணிக்கை பணியில் மத்திய அரசு பிரதிநிதி இருக்கும் போது, முறைகேடு நடக்கும் என தேர்தல் கமிஷன் அஞ்சுவது ஏன்?

ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை மேஜையிலும், ஏற்கனவே நுண் பார்வையாளர் என்ற பெயரில் மத்திய அரசு அதிகாரி இருக்கிறார். அப்படி இருக்கையில், மத்திய அரசு ஊழியர்களை மீண்டும் பணியமர்த்துவது ஏன்? சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும், மாநில பிரதிநிதிகளை தேர்தல் கமிஷன் இன்னும் நியமிக்கவில்லை. மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே நியமிக்க போகிறோம் என, ஏன் எங்களிடம் முன்கூட்டியே சொல்லவில்லை?

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி ஜாய்மால்யா பக்சி, ''ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர் ஆகிய இருவருமே மத்திய அரசு ஊழியர்களாக இருக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் ஒருவேளை முடிவு செய்திருந்தாலும் கூட, அதில் நீதிமன்றம் தவறு கண்டிருக்க முடியாது. மத்திய அல்லது மாநில அரசு அதிகாரிகளை நியமிக்கலாம் என, விதிகள் தெளிவாக கூறுகின்றன. எனவே, தேர்தல் கமிஷனின் சுற்றறிக்கையை விதிகளுக்கு எதிரானது என, எங்களால் சொல்ல முடியாது,'' என்றார்.

இதையடுத்து, ''சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, ஓட்டு எண்ணிக்கையின் போது மாநில அரசு பிரதிநிதிகளும் இருப்பதை உறுதி செய்யும்படி தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,'' என, கபில் சிபல் கோரிக்கை விடுத்தார். ''சுற்றறிக்கையின்படி நடக்க வேண்டும் என்றால், திரிணமுல் காங்., நீதிமன்றத்தை நாடியது ஏன்?'' என, நீதிபதி ஜாய்மால்யா பக்சி கேள்வி எழுப்பினார்.

தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ்.நாயுடு வாதிடுகையில், ''தேர்தல் நடத்தும் அலுவலர் ஒரு மாநில அரசு ஊழியர். எந்த பிரிவைச் சேர்ந்த ஊழியர்களையும் பணியமர்த்த அவருக்கு அதிகாரம் உண்டு. ஓட்டு எண்ணிக்கையின் போது மாநில அரசு ஊழியர்களும் இருப்பர். மேலும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் இருப்பர். அப்படி இருக்கையில், முறைகேடு நடக்கும் என்ற திரிணமுல் காங்கிரசின் அச்சம் தேவையற்றது,'' என்றார்.

இதையடுத்து, 'கூடுதல் உத்தரவுகள் தேவையில்லை' எனக் கூறி, திரிணமுல் காங்கிரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us