ADDED : செப் 16, 2025 06:35 AM

அய்ஸ்வால் : வடகிழக்கு மாநிலமான மிசோரம், முதல் முறையாக கடந்த 13ம் தேதி இந்திய ரயில்வே உடன் இணைக்கப்பட்டது. இம்மாநிலம், 90 சதவீதம் மலைப் பகுதிகளை கொண்டுள்ளது.
இதன் காரணமாக, அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களும், இம்மாநிலத்தில் சாலை வழியாக கொண்டு வரப்படுகின்றன.
இதற்கிடையே, மிசோரம் மாநிலத்தின் தலைநகர் அய்ஸ்வால் அருகில் உள்ள, சாய்ராங்கில் இருந்து பைராபியை இணைக்கும் வகையில், மலையில் 8,071 கோடி ரூபாய் செலவில் 52 கி.மீ., பிரமாண்ட ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ரயில் சேவையை, பிரதமர் மோடி கடந்த 13ம் தேதி துவக்கி வைத்தார். இங்கிருந்து டில்லி, கொல்கட்டா, குவஹாத்திக்கு, பயணியர் ரயில் சேவை இயக்கப்படுகிறது.
இந்நிலையில், அசாமில் இருந்து அய்ஸ்வால் அருகில் உள்ள சாய்ராங் பகுதிக்கு, முதல் சரக்கு ரயில் சேவை, நேற்று முன்தினம் துவங்கப்பட்டது.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருப்பதாவது:
மிசோரம் மாநிலத்துக்கு பயணியர் ரயில் சேவையை தொடர்ந்து, சரக்கு ரயில் சேவையும் துவங்கப்பட்டுள்ளது.
சிமென்ட், கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களும், இதர அத்தியாவசிய பொருட்களும், தேவைக்கு ஏற்ப கொண்டு வரப்படும். இதன் வாயிலாக, இந்த மாநில மக்களுக்கான போக்குவரத்து செலவு குறைவதோடு, பொருட்களின் விலையும் குறையும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

