பெங்களூரில் நாய்கள் பல் திறன் போட்டி தங்கவயலின் 'டிம்பு'வுக்கு முதல் பரிசு
பெங்களூரில் நாய்கள் பல் திறன் போட்டி தங்கவயலின் 'டிம்பு'வுக்கு முதல் பரிசு
ADDED : பிப் 17, 2024 11:34 PM

பெங்களூரு, : பெங்களூரு டி.சி., பாளையாவில் நடந்த நாய்களுக்கான பல் திறன் போட்டியில், தங்கவயலின் நாய் 'சிறந்த நாய்' என்ற விருதைப் பெற்றது.
தங்கவயல் சொர்ணா நகரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செல்லப்பிராணிகளான நாய்களை, தமிழ்க் குடும்பத்தை சேர்ந்த ஏழு சகோதரர்கள் வளர்த்து வருகின்றனர். இவர்கள் வளர்த்து வரும் நாய்கள், பல்வேறு இடங்களில் நடக்கும் போட்டிகளில் ஜி.எஸ்.எஸ்., எனும் 'கோல்டன் செவன்ஸ் ஸ்டார் கென்னல்' என்ற பெயரில் பங்கேற்கும்.
ஏழு சகோதரர்களில், ஓய்வுப் பெற்ற எல்.ஐ.சி, வளர்ச்சி அதிகாரி சேரன், ஓய்வு பெற்ற வாக்காளர் கணக்கெடுப்பு ஆய்வுத்துறை அதிகாரி அன்பானந்தன் ஆகியோர் இவ்விஷயத்தில் ஆர்வமுள்ளவர்கள்.
இந்த வரிசையில், நேற்று முன்தினம் பெங்களூரு டி.சி.பாளையாவில் நடந்த நாய்களுக்கான போட்டியில் ஆந்திரா, தமிழகம், கேரள மாநில செல்லப்பிராணிகளும் பங்கேற்றன. இதில் தங்கவயலின் 'டிம்பு' என்ற இரண்டரை வயது மினியேச்சர் பாம்ரின் நாய், நடப்பது, ஓடுவது, தாண்டுவது, கீழ்படிதல், ஸ்டைல், பராமரிப்பு என பல போட்டிகளில் முதல் பரிசைப் பெற்றது.
முதல் பரிசை பெற்றதால் அதை வளர்த்து வருவோர், குடும்பத்தினர், நண்பர்களுடன் கொண்டாடினர்.
குடும்பத்தினர் கூறுகையில், 'சொல்வதை செய்யும் வளர்ப்பு நாய்கள், எங்களால் நேசிக்கப்படுகின்றன. எங்கள் ஓய்வு நேரத்தை, செல்ல பிராணிளுடன் கழித்து வருகிறோம்' என்றனர்.