வேற்று கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்ப முதல்படி: லடாக்கில் சோதனையை துவங்கியது இஸ்ரோ
வேற்று கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்ப முதல்படி: லடாக்கில் சோதனையை துவங்கியது இஸ்ரோ
UPDATED : நவ 02, 2024 06:29 PM
ADDED : நவ 02, 2024 03:40 AM

புதுடில்லி: விண்வெளிக்கும், வேற்று கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் நம் எதிர்கால முயற்சிகளுக்கு உதவும் வகையில், அங்குள்ள தட்பவெப்ப நிலைகள், தொழில்நுட்ப சவால்களை சமாளிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய, முதல் 'அனலாக்' சோதனை முயற்சியை லடாக்கின் லே பகுதியில், இஸ்ரோ நேற்று துவங்கியது.
விண்வெளி ஆராய்ச்சியில் முன் எப்போதும் இல்லாத புதிய பாய்ச்சல்களை இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம் நிகழ்த்தி வருகிறது.
இதற்காக, 'விண்வெளி பார்வை 2047' என்ற திட்டத்தை இஸ்ரோ வகுத்துள்ளது. இதன்படி, 2035ல், 'பாரதிய அந்தரிக் ஷா' என்ற நம் விண்வெளி ஆய்வு மையத்தை விண்வெளியில் நிறுவுவது, 2040ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது, செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது உள்ளிட்ட திட்டங்களை வரிசைப்படுத்தி உள்ளது.
த
இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன், விண்வெளி மற்றும் வேற்று கிரகங்களில் உள்ள நிலைமைகளை ஆராய வேண்டியது அவசியம். அங்குள்ள சூழல்களை பூமியில் உருவாக்கி அந்த சோதனைகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டது.
இதற்காக முதல், 'அனலாக்' விண்வெளி சோதனையை நேற்று துவங்கியது. விண்வெளியில் உள்ள தட்பவெப்பம் மற்றும் இதர புறச்சூழல்களுக்கு இணையான இடத்தில், செய்யப்படும் சோதனையே அனலாக் சோதனை என்று அழைக்கப்படுகிறது.
இதற்காக, லடாக்கின் லே பகுதியை இஸ்ரோ தேர்வு செய்தது. அங்கு, 'ஹாப் 1' என்றழைக்கப்படும், விரிவடையக்கூடிய வாழ்விடத்தை இஸ்ரோ அமைத்துள்ளது. இதற்குள் தங்கும் விஞ்ஞானிகளுக்கு, வேற்று கிரகத்தில் வசிப்பதைப் போன்ற சூழல்கள் செயற்கையாக உருவாக்கப்படும்.
இந்த ஹாப் 1 கூடாரத்தில், மண் உதவியின்றி தண்ணீரில் விளையும் தாவரங்கள், சமையலறை, கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு தங்கியபடி, வேற்று கிரகத்தின் புறச்சூழல்கள் குறித்து நம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொள்வர். வேற்று கிரகங்களுக்கு மனிதர்கள் செல்லும்போது எப்படிப்பட்ட சவால்களை எதிர்கொள்வர், அதை சமாளிப்பது எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு இந்த ஆய்வு விடையளிக்கப் போகிறது.
இதன் வாயிலாக கிடைக்கும் தரவுகளை வைத்து, இஸ்ரோவின் எதிர்கால விண்வெளி திட்டத்தில் உள்ள சவால்கள் மற்றும் சிக்கல்களை விஞ்ஞானிகள் புரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டங்களை வகுக்க உதவியாக இருக்கும்.
மனித விண்வெளிப் பயண மையம், இஸ்ரோ, விண்வெளி சூழல்களை செயற்கையாக உருவாக்கும் தனியார் கட்டடக்கலை நிறுவனமான ஆக்கா ஸ்பேஸ் ஸ்டூடியோ, லடாக் பல்கலை, மும்பை ஐ.ஐ.டி., ஆகியவை இணைந்து லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் உதவியுடன் இந்த சோதனையை நடத்துகின்றன.

