பாலத்தின் சுவரில் பஸ் மோதி ம.பி.,யில் ஐந்து பேர் உயிரிழப்பு
பாலத்தின் சுவரில் பஸ் மோதி ம.பி.,யில் ஐந்து பேர் உயிரிழப்பு
ADDED : ஆக 28, 2026 06:01 PM
ராஜ்கார்: மத்திய பிரதேசத்தில், ‘ஸ்லீப்பர்’ எனப்படும், படுக்கை வசதி உடைய சொகுசு பஸ், பாலத்தின் சுவர் மீது மோதியதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது, சாலையில் துாக்கி வீசப்பட்ட ஐந்து பயணியர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசத்தின் கான்பூரில் இருந்து ம.பி.,யின் இந்துார் நோக்கி 17 பயணியருடன், ‘ஸ்லீப்பர்’ பஸ் புறப்பட்டது. நேற்று காலை 7:00 மணிக்கு ம.பி.,யின் ராஜ்கர் மாவட்டம் பயோரா அருகே போபால் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தது. வளைவில் திரும்பியபோது பாலத்தின் சுவர் மீது பஸ் மோதியது. இதில் பஸ்சின் ஜன்னல் உடைந்ததில் ஸ்லீப்பரில் படுத்திருந்தவர்கள் 30 அடி உயரத்தில் இருந்து கீழே துாக்கி வீசப்பட்டனர்.
இதில் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, 45, பஸ் டிரைவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்; இரு பெண்கள் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர். மேலும் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு பயோரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற நான்கு பேர் போபால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவர் அதிவேகமாக பஸ்சை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.
