ஜம்மு-காஷ்மீரில் சோகம்: கார்-லாரி மோதியதில் 5 பேர் பரிதாப பலி
ஜம்மு-காஷ்மீரில் சோகம்: கார்-லாரி மோதியதில் 5 பேர் பரிதாப பலி
ADDED : நவ 16, 2025 07:14 AM

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பட்கமில் இரவு நேரத்தில் கார்-லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடை ந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் இரவு நேரத்தில், கார்-லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பட்கமில் உள்ள பாலார் என்ற இடத்தில் இரவு 10.30 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். விபத்து இரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது.
வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
முதல்வர் உமர் அப்துல்லா
பட்கமில் நடந்த துயர விபத்து அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கவும், அவசர மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யவும் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.
விபத்துக்கான காரணம் முழுமையாக விசாரிக்கப்படும்.
துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா
பட்கமில் நடந்த ஒரு துயரமான சாலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. துயரத்தில் இருக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

