ADDED : அக் 24, 2024 12:52 AM
விஜயநகரா, கர்நாடக மாநிலம் விஜயநகரா மாவட்டத்தில், தும்பிகெரே கிராமத்தில் சில நாட்களாக பொதுக் குழாயில் அசுத்தமான குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதையே கிராமத்தினர் பயன்படுத்தினர்.
இதன் விளைவாக வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்படுகின்றனர்.
கிராமத்தின் 50க்கும் மேற்பட்டோர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் மஹாந்தேஷ், 45, கவுரம்மா, 60, ஹனுமந்தப்பா, 38, சுரேஷ், 30, எட்டு மாத ஆண் குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து ஐந்து பேர் இறந்ததால், கிராமத்தில் பீதி நிலவுகிறது.
தகவலறிந்து கிராமத்துக்கு வந்த சுகாதார அதிகாரிகள், மக்கள் பயன்படுத்திய குடிநீர் மாதிரியை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பினர்.
இறந்த ஐவரும், அசுத்த குடிநீர் பயன்படுத்தியதால் இறந்தனரா அல்லது அவர்களுக்கு வேறு ஏதாவது உடல்நிலை பாதிப்பு இருந்ததா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
