மூடுபனியால் தவிக்கும் வட மாநிலங்கள்! விமான, ரயில் சேவையில் கடும் பாதிப்பு
மூடுபனியால் தவிக்கும் வட மாநிலங்கள்! விமான, ரயில் சேவையில் கடும் பாதிப்பு
ADDED : ஜன 03, 2025 08:24 AM

புதுடில்லி: டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் மூடுபனி காரணமாக ரயில், விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாகவே காலநிலையில் தொடர்ந்து மாறுபாடுகள் காணப்படுகின்றன. டிசம்பர் மாத இறுதியில் கடும் பனி காரணமாக சாலைகள், கட்டிடங்கள் தெரியாத நிலை காணப்பட்டது.
இந் நிலையில், இன்றும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்சம் 7.6 ஆகவும் பதிவாகி இருக்கிறது.
கடும் குளிரால் தவிக்கும் மக்கள், ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து பனியின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்கின்றனர். ஜனவரி 8ம் தேதி வரை இதே காலநிலை நீடிக்கலாம், அவ்வப்போது மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறி உள்ளது.
சாலைகள் எங்கும் அடர்த்தியான பனி காணப்படுவதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.
சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, வான் மற்றும் ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு காணப்படுகிறது. மோசமான வானிலை காரணமாக அமிர்தசரஸ், கவுகாத்தி நகரங்களுக்கு விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து தலைநகர் டில்லி நோக்கி வரும் ரயில்களின் வருகையில் தாமதம் நிலவி வருகிறது. வழித்தடங்களில் கடும் பனி நிலவி காணப்படுவதால் ரயில்களை குறைந்த வேகத்திலேயே இயக்குமாறு ஒட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பயணிகள் தங்கள் பயண நேரங்களை விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.