பெண் போலீசுடன் உல்லாசம்; கான்ஸ்டபிளான டி.எஸ்.பி.,
பெண் போலீசுடன் உல்லாசம்; கான்ஸ்டபிளான டி.எஸ்.பி.,
ADDED : ஜூன் 24, 2024 04:55 AM

லக்னோ : பெண் போலீசுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த போலீஸ் டி.எஸ்.பி., ஒருவர், கான்ஸ்டபிளாக பதவி இறக்கப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் கிருபா சங்கர் கண்ணுாஜியா. இவர், 2021ல், உன்னாவ் போலீஸ் ஸ்டேஷனில் சர்க்கிள் அதிகாரியாக இருந்தார்.
அப்போது, ஒருநாள் குடும்ப சூழல் காரணமாக விடுப்பு வேண்டும் எனக் கூறி சென்றவர், வீட்டுக்கு செல்லாமல் கான்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தன்னுடன் பணிபுரியும் பெண் கான்ஸ்டபிளுடன், கிருபா சங்கர் தனிமையில் இருந்துள்ளார்.
தன் மொபைல் போன்களையும் அவர் அணைத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, அவரை தொடர்பு கொள்ள முடியாத கிருபாவின் மனைவி, உன்னாவ் போலீஸ் ஸ்டேஷனில் முறையிட்டார்.
மொபைல் போன் டவரை வைத்து, அவர் இருப்பிடத்தை அறிந்த போலீசார், ஹோட்டலுக்கு சென்று கிருபா மற்றும் அவருடன் இருந்த பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர்.
இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. இதன் முடிவில், டி.எஸ்.பி.,யாக பணியில் இருந்த கிருபா சங்கர், கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய லக்னோ ஐ.ஜி., பரிந்துரைத்தார். இதையடுத்து, கோரக்பூர் ஆயுதப் படைப் பிரிவின் கான்ஸ்டபிளாக அவர் தற்போது நியமிக்கப்பட்டு உள்ளார்.