ADDED : ஜூலை 25, 2024 05:40 PM

ராய்ச்சூர்: ஏட்டு ஒருவர், காதலியுடன் உல்லாசமாக இருக்கும் போது, மனைவியிடம் கையும், களவுமாக சிக்கினார். கணவரை அறையில் அடைத்து வைத்து, உயர் அதிகாரிகளிடம் மனைவி ஒப்படைத்தார்.
ராய்ச்சூரின் சிரவாராவில் வசிப்பவர் ராஜ் முகமது, 38. இவர் சிரவாரா போலீஸ் நிலையத்தில், ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். இவரது மனைவி பியாரி பேகம், 30, தேவதுர்கா போலீஸ் நிலையத்தில், ஏட்டாக உள்ளார்.
தம்பதி அன்யோன்யமாகவே இருந்தனர். ஆனால் சில ஆண்டுகளாக, ராஜ் முகமதுக்கு வேறு ஒரு பெண்ணுடன், கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. காதலிக்காக மனைவியை, நான்கு ஆண்டுகளாக விலக்கி வைத்துள்ளார். கணவரின் செயல் குறித்து, போலீஸ் அதிகாரிகளிடம் மனைவி புகார் அளித்திருந்தார். அதிகாரிகளும் இரண்டு முறை, ராஜ் முகமதுவுக்கு அறிவுரை கூறி எச்சரித்தும், அவர் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.
இந்நிலையில், சிரவாராவில் வீடு ஒன்றில் காதலியுடன் ராஜ் உல்லாசமாக இருப்பது, மனைவி பியாரி பேகத்துக்கு தெரிந்தது. உடனடியாக அந்த வீட்டுக்கு சென்ற அவர், அங்கு கணவர் இருப்பதை உறுதி செய்து கொண்டார். கொதிப்படைந்த மனைவி, வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு, எஸ்.பி.,க்கு போன் செய்து, நடந்ததை கூறி புகார் செய்தார். தகவலறிந்து அங்கு வந்த சிரவாரா போலீசார், பூட்டை திறந்து ராஜ் முகமதையும், அவரது காதலியையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.