வெள்ள பாதிப்பு : ஹிமாச்சல் மற்றும் பஞ்சாபில் பிரதமர் மோடி நாளை ஆய்வு
வெள்ள பாதிப்பு : ஹிமாச்சல் மற்றும் பஞ்சாபில் பிரதமர் மோடி நாளை ஆய்வு
ADDED : செப் 08, 2025 09:55 PM

புதுடில்லி: கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களை பிரதமர் மோடி நாளை ( செப்., 09) நாளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.
பருவமழை துவங்கியதில் இருந்து உத்தராகண்ட், காஷ்மீர், ஹிமாச்சல், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இமயமலை பகுதியில் அமைந்துள்ள உத்தராகண்ட், ஹிமாச்சல், காஷ்மீரில் அவ்வபோது மேகவெடிப்பு காரணமாக அதிதீவிர கனமழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்படுவதோடு, விபத்துகளும் நடக்கின்றன. இதனால், அம்மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்வார் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி நாளை பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார்.
ஹிமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் பிரதமர் நாளை மதியம் 1:30 மணியளவில் கங்ரா சென்று, உயர் அதிகாரிகளை சந்தித்து சூழ்நிலை குறித்து ஆய்வு செய்கிறார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதுடன் தேசிய மற்றும் மாநில பேரிடர் படையினரை சந்திக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாலை 3 மணியளவில் பஞ்சாபில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளார்.