மூணாறில் மலர் கண்காட்சி நாளை துவங்குகிறது: மே 10 வரை நடக்கிறது
மூணாறில் மலர் கண்காட்சி நாளை துவங்குகிறது: மே 10 வரை நடக்கிறது
ADDED : ஏப் 30, 2025 06:12 AM

மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் மாவட்ட சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான தாவரவியல் பூங்காவில் நாளை (மே 1) துவங்கும் மலர் கண்காட்சி மே 10 வரை நடக்கிறது.
இடுக்கி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா பகுதியான மூணாறுக்கு கோடை சுற்றுலா சீசனில் வரும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு மாவட்ட சுற்றுலா துறைக்குச் சொந்தமான தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை துவங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜா மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
இப்பூங்காவில் வெளி நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வகையான பூக்கள் உள்பட 1500 வகையான பூக்கள் வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன.
பூங்கா முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் இரவிலும் ஜொலிக்கிறது. மேலும் வரையாடு, யானை, காட்டு மாடு, மான் உருவங்கள் மலர்களால் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. மியூசிக்கல் மவுண்டன், 'செல்பி பாய்ண்ட்' கள் ஆகியவையும் பார்வையாளர்களை கவருவதாக அமைக்கப்பட்டுள்ளன.
மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் மாலையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை மலர்கண்காட்சியை கண்டு ரசிக்கலாம். நுழைவு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.100, சிறுவர்களுக்கு ரூ.50.