அரசியல் செய்வதில் தான் கவனம்; அமெரிக்கா - பாக்., உறவு குறித்து ஜெய்சங்கர் கருத்து
அரசியல் செய்வதில் தான் கவனம்; அமெரிக்கா - பாக்., உறவு குறித்து ஜெய்சங்கர் கருத்து
ADDED : ஆக 23, 2025 06:42 PM

புதுடில்லி: சில நாடுகள் அரசியல் செய்வதில் கவனம் செலுத்துவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு குறித்து கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்துள்ளார்.
வரிவிதிப்புகளால் இந்தியா - அமெரிக்கா இடையே சற்று பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதேவேளையில், அமெரிக்கா, பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், டில்லியில் நடந்த உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரிடம், அமெரிக்கா - பாகிஸ்தானின் தற்போதைய உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் பதிலளித்ததாவது; அமெரிக்கா, பாகிஸ்தான் உறவுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இதுபோன்ற விஷயங்களை நாங்கள் முதன்முறையாகப் பார்ப்பதில்லை. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அமெரிக்க ராணுவம் தான் அபோட்டாபாத்தில் நுழைந்து அங்கே யார் ( ஒசாமா பின்லேடன்) இருந்தார் என்பதைக் கண்டறிந்தது.
சில நாடுகள் தங்களின் வசதிக்காக அரசியலைச் செய்வதில் மிகவும் கவனம் செலுத்தும்போதுதான் இதுபோன்ற பிரச்னை எழும். அவர்கள் இதைச் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். அதில் சில தந்திரோபாயமாக இருக்கலாம், அல்லது வேறு சில கணக்குகள் போடலாம். நான் என்னவென்று எனக்குத் தெரியும். எனது பலம் என்னவென்று எனக்குத் தெரியும். எனது உறவின் முக்கியத்துவமும், பொருத்தமும் என்னவென்று எனக்குத் தெரியும். அது தான் என்னை வழிநடத்துகிறது, இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், அமெரிக்க வரி விதிப்பு குறித்து அவர் பேசியதாவது; விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாப்பதில் எப்போதும் இந்தியா கவனம் செலுத்தும். அதில் சமரசம் என்பதே கிடையாது. நம்மை காட்டிலும் அதிகமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை விட்டு விடுவதும், நமக்கு வரி விதிப்பதும் நியாயமற்றது.
இது முற்றிலும் எண்ணெய் தொடர்பான பிரச்னை கிடையாது. ஏனெனில் நம்மை காட்டிலும் ரஷ்யாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனாவுக்கு இப்படி வரி விதிக்கவில்லை.
அதிக இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யும் ஐரோப்பிய யூனியன் மீது வரி விதிக்கவில்லை. இந்தியாவை காட்டிலும் அதிகப்படியான வர்த்தகத்தை ரஷ்யாவுடன் ஐரோப்பிய யூனியன் செய்கிறது. இந்தியா எடுக்கும் முடிவுகள், நம் நாட்டின் தேசிய நலனை கருத்தில் கொண்டும், இறையாண்மை உரிமையாலும் எடுக்கப்படுகின்றன.
இந்தியாவும், அமெரிக்காவும் பெரிய நாடுகள். இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்படவில்லை. பேசிக் கொண்டே தான் இருக்கின்றனர். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.