கர்பூரி தாக்கூரை பின்பற்றுங்க இளைஞர்களுக்கு மோடி 'அட்வைஸ்'
கர்பூரி தாக்கூரை பின்பற்றுங்க இளைஞர்களுக்கு மோடி 'அட்வைஸ்'
ADDED : ஜன 25, 2024 01:33 AM
புதுடில்லி, ''ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய கர்பூரி தாக்கூரின் சித்தாந்தங்களை பின்பற்றுங்கள்,'' என, இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.
என்.சி.சி., எனப்படும், தேசிய மாணவர் படை மற்றும் என்.எஸ்.எஸ்., எனப்படும், நாட்டு நலப்பணி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மறைந்த பீஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் வாழ்க்கையைப் பற்றி இன்றைய இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்வது அவசியம்.
கர்பூரி, தன் இளம்வயதில் வறுமை மற்றும் ஜாதி வேறுபாட்டால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு உயர் பதவியை அடைந்தார்.
அவர், இருமுறை பீஹாரின் முதல்வராக இருந்தார். கர்பூரி, அவரது சமூகத்திற்காக மட்டும் உழைக்கவில்லை; அவரது முழு வாழ்வையும் சமூக நீதிக்காக அர்ப்பணித்தவர்.
எனவே, இளைஞர்களுக்கு எப்போதும் நம் தேசம் தான் முதல் நோக்கமாக இருக்க வேண்டும்; நம் வாழ்வில் எதை செய்தாலும், அது நாட்டிற்காக மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நம் நாட்டின் 75வது குடியரசு தின விழாவை கொண்டாட உள்ளோம்; இது, பெண் சக்திக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
வரும் 2047ம் ஆண்டுக்குள் நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற, மத்திய அரசு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதற்கு, இளைஞர்களின் ஆற்றல், கூடுதல் வேகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும். எனவே, உங்கள் திறனும், தொலைநோக்கு பார்வையும் நம் நாட்டை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.