பெண்ணை ஒரு முறை பின் தொடர்வது; துன்புறுத்தல் ஆகாது: மும்பை ஐகோர்ட்
பெண்ணை ஒரு முறை பின் தொடர்வது; துன்புறுத்தல் ஆகாது: மும்பை ஐகோர்ட்
ADDED : ஜன 06, 2025 07:44 AM
மும்பை : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், பெண்ணை ஒரு முறை பின் தொடர்வது துன்புறுத்தலின் கீழ் வராது, தொடர் செயலுக்கு தான் அந்த பிரிவை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது.
மஹாராஷ்டிராவின் அகோலா மாவட்டம், கட்கா பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ், 19, கூலி தொழிலாளி. கடந்த 2020 ஜனவரியில் சிறுமி ஆற்றுக்கு தண்ணீர் எடுத்து வர சென்ற போது, அவரை ஆகாஷ் பின் தொடர்ந்து சென்று, 'உன்னை பிடித்திருக்கிறது, திருமணம் செய்ய விருப்பம்' என கூறியுள்ளார்.
இதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததுடன், தன் தாயிடம் கூறினார். வாலிபரை சிறுமியின் தாய் எச்சரித்து அனுப்பினார். அதன் பின் 2020 ஆகஸ்ட் 26 அன்று சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, ஆகாஷ் தன் நண்பன் அமித், 19, என்பவருடன் சேர்ந்து சிறுமியின் வீட்டிற்கு சென்றார்.
அமித்தை வெளியே காவலுக்கு நிறுத்திவிட்டு, உள்ளே சென்ற ஆகாஷ் சிறுமியின் வாயை பொத்தி தகாத இடங்களில் தொட்டு தொல்லை தந்துள்ளார். இது குறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டது. அவர்கள் போக்சோ மற்றும் சிறுமியை பின் தொடர்ந்து சென்று துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த அகோலா விசாரணை நீதிமன்றம், கடந்த 2022ல் இரு வாலிபர்களுக்கும் ஏழாண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இருவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனு நீதிபதி சனாப் முன் விசாரணைக்கு வந்தது. அவர், முதல் குற்றவாளியான ஆகாஷின் தண்டனையை உறுதி செய்தார். இளம் வயது காரணமாக அவரின் சிறை தண்டனை காலத்தை பாதியாக குறைத்தார். இரண்டாவது குற்றவாளி நேரடியாக குற்றம் செய்யாமல், வெளியே நின்றதால் அவரை விடுவித்தார்.
மேலும், 'இந்த வழக்கில் ஒரே ஒரு முறை மட்டுமே குற்றவாளி சிறுமியை பின் தொடர்ந்ததால், அது துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வராது. நேரடியாகவோ அல்லது, 'டிஜிட்டல்' உபகரணங்கள் வாயிலாகவோ துன்புறுத்தியதற்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே இந்த சட்டப் பிரிவு பொருந்தும்' என கூறி வழக்கில் இருந்து அந்த பிரிவை நீக்கினார்.

