ADDED : பிப் 13, 2025 01:17 AM
மும்பை: மஹாராஷ்டிராவின் புனேயை தொடர்ந்து, ஜி.பி.எஸ்., எனப்படும் கிலன் பா சிண்ட்ரோம் பாதிப்பால் மும்பையில் நேற்று முதல் நபர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவின் புனேவில், ஜி.பி.எஸ்., பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. அரிய வகை நரம்பியல் பாதிப்பு காரணமாக இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 50 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது; 20 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மும்பையின் வடாலா பகுதியைச் சேர்ந்த 53 வயது நபர், அங்குள்ள மாநகராட்சி மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் புனேவிற்கு சென்று வந்த அவருக்கு, திடீரென கால்களில் வலி ஏற்பட்டது.
இதன் காரணமாக, அங்குள்ள மற்றொரு மருத்துவமனையில் ஜனவரி 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்ததால் உடனே அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
அங்கு தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பின் கீழ் இருந்த அவருக்கு, செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இறந்த நபருக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உட்பட எந்த அறிகுறியும் தென்படவில்லை எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஜி.பி.எஸ்., பாதிப்பால் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பு இது என மாநகராட்சி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.