ADDED : டிச 09, 2024 03:22 AM
ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பாதல் கோர்லா கிராமத்தை சேர்ந்தவர் பாஷல் உசேன், 40. இவரது மனைவி சமீம் அக்தர். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள்.
நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்ட சற்று நேரத்தில் உசேன் உள்ளிட்ட அனைவருக்கும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
அவர்களை அக்கம் பக்கத்தினர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உசேன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி மற்றும் குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக ஜம்மு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைகள் ரபியா கவுசர், 15; பர்மனா கவுசர், 12; ரப்தர் அகமது, 4 ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
மனைவி அக்தர் மற்றும் மற்றொரு மகள் ருக்சர் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். உணவின் விஷத்தன்மை காரணமாக நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.