5 ஆண்டும் அப்பா தான் முதல்வர் மகன் யதீந்திரா திட்டவட்டம்
5 ஆண்டும் அப்பா தான் முதல்வர் மகன் யதீந்திரா திட்டவட்டம்
ADDED : மார் 05, 2024 07:26 AM

ஹாசன்: ''நிலையான ஆட்சியை தர வேண்டியது அனைத்துக் கட்சிகளின் பொறுப்பு. எனவே சித்தராமையா, ஐந்தாண்டுகளும் முதல்வராக நிறைவு செய்வார். இதில் எனக்கு நம்பிக்கை உண்டு,'' என, அவரது மகன் யதீந்திரா தெரிவித்தார்.
கர்நாடகாவில் கடந்தாண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசில், சித்தராமையா முதல்வராகவும், சிவகுமார் துணை முதல்வராகவும் பதவி வகிக்கின்றனர்.
ஆட்சிக் காலம், இரண்டரை ஆண்டுகள் முடிந்ததும், சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்படும் என்று ஆரம்பித்திலேயே காங்., மேலிடம் உறுதி அளித்ததாக தகவல் வெளியானது.
ஆனால், ஐந்தாண்டுகளும் சித்தராமையா தான் முதல்வராக நீடிக்க வேண்டும் என்று அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூறி வந்தனர்.
இது உட்கட்சி பூசலை ஏற்படுத்தியதால், யாரும் பகிரங்கமாக பேசக்கூடாது என்று மேலிடம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், லோக்சபா தேர்தலுக்கு பின், சித்தராமையாவின் முதல்வர் பதவி பறிக்கப்படும் என்ற அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதுகுறித்து, ஹாசனில் அவரது மகன் யதீந்திரா நேற்று கூறியதாவது:
நிலையான ஆட்சியை தர வேண்டியது அனைத்துக் கட்சிகளின் பொறுப்பு. எனவே சித்தராமையா, ஐந்தாண்டுகளும் முதல்வராக நிறைவு செய்வார். இதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
பா.ஜ., ஆட்சியின்போது, பலர் முதல்வர் பதவியை எதிர்பார்த்தனர். சமூகத்தின் கடை கோடி குடிமகனுக்கும், சித்தராமையா சக்தி அளிக்கிறார். அத்தகைய தலைவருக்கு மக்கள் சக்தி தர வேண்டும்.
மைசூரு லோக்சபா தொகுதி வேட்பாளரை, மேலிடம் தேர்வு செய்யும். நான் வாய்ப்பு கேட்க மாட்டேன். எதிர்பார்க்கவும் இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை வெளியிட அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

