சுதந்திரம் கிடைத்ததற்கு பிறகு முதல் முறையாக குடும்ப செலவில் உணவுக்கான தொகை சரிவு
சுதந்திரம் கிடைத்ததற்கு பிறகு முதல் முறையாக குடும்ப செலவில் உணவுக்கான தொகை சரிவு
ADDED : செப் 06, 2024 05:17 AM

புதுடில்லி: நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததற்கு பிறகு முதல்முறையாக, உணவுக்கு இந்திய குடும்பங்கள் செலவிடும் தொகை, குடும்பத்தின் மொத்த சராசரி செலவில் பாதிக்கு கீழ் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு நடத்திய ஆய்வு அடிப்படையில் வெளியான தகவல்கள் வருமாறு: 'அரசின் கொள்கைகள் பிரதிபலிப்பு மற்றும் இந்திய உணவு நுகர்வில் மாற்றங்கள்' என்ற தலைப்பில், 2022 - 23 மற்றும் 2011 - 12 ஆண்டுகள் இடையே, இந்திய குடும்பங்களின் நுகர்வு செலவுக்கான ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடின்றி, குடும்பங்களின் சராசரி செலவழிப்பில், உணவுக்கான செலவு, பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது.
சுதந்திரம் பெற்றதில் இருந்து இப்போது வரை, முதல்முறையாக மாத செலவில் உணவுக்காக செலவிடும் தொகையின் சராசரி குறைந்திருப்பது, குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது. மாதாந்திர குடும்பச் செலவு அதிகரித்து வந்துள்ள போதிலும், உணவுக்கான செலவில் சரிவு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க கிராமப் பகுதிகளில், நுகர்வுக்கான செலவின் வளர்ச்சி 151 சதவீதமாகவும்; தமிழகத்தில் அது 214 சதவீதமாகவும்; அதிகபட்சமாக சிக்கிமில் 394 சதவீதமாகவும் உள்ளன. செலவிற்கான வளர்ச்சி, நகரங்களை விட கிராமப்பகுதிகளில் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
நகரங்கள், கிராமங்கள் வேறுபாடின்றி, தானியங்களுக்கான செலவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருக்கிறது. தயார்நிலை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெளியே வாங்கும் உணவுகள் கணிசமான இடம் பிடித்திருப்பதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பொது வினியோக திட்டத்தில் உணவு தானியங்கள் வழங்கப்படுவதும், குடும்பங்கள் அதற்காக செலவிடும் தொகையை கணிசமாக குறைத்துள்ளது. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.