'மொபைல் போன்' செயலியில் ஓட்டளிக்கலாம்: பீஹாரில் அறிமுகம்
'மொபைல் போன்' செயலியில் ஓட்டளிக்கலாம்: பீஹாரில் அறிமுகம்
UPDATED : ஜூன் 29, 2025 07:42 AM
ADDED : ஜூன் 29, 2025 12:43 AM

பாட்னா: நாட்டிலேயே முதன்முறையாக, 'மொபைல் போன்' செயலி வாயிலாக ஓட்டுப்பதிவு செய்யும் நடைமுறையை, பீஹாரில் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியது.
தேர்தலில் ஓட்டுப்பதிவை எளிமையாக்கவும், அனைவருக்கும் ஓட்டளிக்கும் வாய்ப்பை உறுதி செய்யவும் தலைமை தேர்தல் கமிஷன் சமீபகாலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் முக்கியமான ஒரு முயற்சியாக, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணியருக்கு வீட்டிலிருந்தே ஓட்டளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கு, மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
புரட்சிகரமான மாற்றம்
வீட்டிலிருந்து ஓட்டளிக்கும் இந்த திட்டம், ஓட்டுச்சாவடிக்கு வர முடியாதவர்களுக்கு தபால் ஓட்டு முறையைப் பயன்படுத்தி ஓட்டுப்போட உதவுகிறது.
இந்த நடைமுறை, 2024 லோக்சபா தேர்தல் உள்ளிட்ட பல மாநில தேர்தல்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இது, முதியோருக்கு ஓட்டுரிமையை எளிதாக்கியது.
அந்த வகையில், நாட்டிலேயே முதன்முறையாக, 'மொபைல் போன்' செயலி வாயிலாக ஓட்டுப்பதிவு செய்யும் வசதியை பீஹாரில் தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது.
இது, தேர்தல் செயல்முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
பீஹார் மாநில தேர்தல் கமிஷனர் தீபக் பிரசாத், இந்த புதிய முயற்சியை சமீபத்தில் அறிவித்தார். பீஹாரின் பாட்னா, ரோஹ்டாஸ் மற்றும் கிழக்கு சம்பாரன் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள ஆறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று நடந்த தேர்தல்களில், 'மொபைல் போன்' செயலி வாயிலாக மக்கள் ஓட்டளித்தனர்.
இதுகுறித்து மாநில தேர்தல் கமிஷனர் தீபக் கூறியதாவது:
ஓட்டுச்சாவடிக்கு வர முடியாதவர்களுக்கு, குறிப்பாக முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியருக்கு ஓட்டளிக்கும் வாய்ப்பை எளிதாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுஉள்ளது.
தேர்தல் செயல்முறையை மேலும் அணுகக்கூடியதாகவும், நவீனமாக மாற்றுவதற்கும் இது ஒரு முக்கிய படி.
ஓட்டுப்பதிவு முறையை செயல்படுத்துவதற்கு, பீஹார் மாநில தேர்தல் கமிஷன் சார்பில், இ - எஸ்.இ.சி.பி.எச்.ஆர்., என்ற பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் இந்த செயலியை தரவிறக்கம் செய்து, தங்கள் மொபைல் போன் எண்ணைப் பயன்படுத்தி பதிவுசெய்து கொள்ள வேண்டும். தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களும் இதை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
இந்த செயலியில், 'பிளாக்செயின்' எனும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தையும், முக அடையாள சரிபார்ப்பு முறையையும் பயன்படுத்தி உள்ளோம்.
இவை, ஒவ்வொரு ஓட்டும் பாதுகாப்பாகவும், மோசடி இல்லாமலும் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யும்.
ஒரு மொபைல் போன் எண்ணில் இருந்து இரண்டு வாக்காளர்கள் மட்டுமே ஓட்டளிக்க முடியும். மேலும் ஒவ்வொரு ஓட்டும் தனிப்பட்ட அடையாளத்துடன் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்படும்.
மக்களின் நம்பிக்கை
இதனால், ஓட்டு மோசடி, இரட்டை ஓட்டுப்பதிவு அல்லது தவறான ஓட்டுப்பதிவு போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும். இந்த பாதுகாப்பு அம்சங்கள், மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
செயலி வாயிலாக ஓட்டளிப்பதற்கு பீஹார் மாநிலத்தில் ஏற்கனவே, 10,000 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், 50,000 வாக்காளர்கள் செயலியில் ஓட்டளிப்பர் என கணித்துள்ளோம்.
இந்த நடைமுறை வெற்றியடைந்தால், இந்தாண்டு இறுதியில் பீஹாரில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும், எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களிலும் இதேபோன்ற மொபைல் போன் செயலி ஓட்டுப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.