லிங்காயத் ஓட்டுகளுக்கு காங்., குறி விஜயானந்துக்கு முக்கிய பொறுப்பு
லிங்காயத் ஓட்டுகளுக்கு காங்., குறி விஜயானந்துக்கு முக்கிய பொறுப்பு
ADDED : பிப் 18, 2024 02:36 AM

பெங்களூரு: லிங்காயத் ஓட்டுகளுக்கு குறி வைத்து, அந்த சமூகத்தை சேர்ந்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவரை, கர்நாடகா வீரசைவ லிங்காயத் வளர்ச்சி வாரிய தலைவராக நியமித்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.
பாகல்கோட் ஹுனகுந்த் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர். லிங்காயத் சமூகத்தை சேர்ந்த இவர், முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். அமைச்சர் பதவி எதிர்பார்த்தார்; ஆனால் கிடைக்கவில்லை.
கடந்த மாதம் வெளியான வாரிய தலைவர்கள் பட்டியலில், விஜயானந்த் காசப்பனவருக்கும் இடம் கிடைத்தது. கர்நாடகா விளையாட்டு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் சர்ச்சை வெடித்தது.
விளையாட்டு துறை அமைச்சராக இருப்பவரே, விளையாட்டு ஆணைய தலைவராக இருக்க முடியும் என்ற நடைமுறையை, அரசு கடைப்பிடித்து வருகிறது. விளையாட்டு துறை அமைச்சர் நினைத்தால், துணைத் தலைவர் பதவியை உருவாக்கலாம்.
ஆனால் துணைத் தலைவராக இருப்பதற்கு, விஜயானந்த் எதிர்ப்பு தெரிவித்தார். வேறு வாரிய தலைவர் பதவி வேண்டும் என்றும் அடம்பிடித்தார்.
இந்நிலையில் கர்நாடகா வீரசைவ லிங்காயத் வளர்ச்சி வாரிய தலைவராக, விஜயானந்த் காசப்பனவரை நியமித்து, கர்நாடகா அரசு நேற்று உத்தரவிட்டு உள்ளது. இதன்பின்னணியில் அரசியலும் உள்ளது.
லிங்காயத் சமூகத்திற்கு '2ஏ' இடஒதுக்கீடு கேட்டு, மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, விஜயானந்த்தும் ஆதரவாக உள்ளார். பா.ஜ., ஆட்சியில் இருந்த போது நடந்த போராட்டத்தை, முன்நின்றும் நடத்தினார். காங்கிரஸ் ஆடசிக்கு வந்த பின்னரும் 2ஏ இடஒதுக்கீடு பற்றி, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், லிங்காயத் ஓட்டுகள் கையை விட்டு போகுமோ என்றும், முதல்வர் சித்தராமையாவுக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. லிங்காயத் ஓட்டுகளுக்கு குறி வைத்து, விஜயானந்த்துக்கு, வீரசைவ லிங்காயத் வளர்ச்சி வாரிய தலைவர் பதவி கொடுக்கப்பட்டு இருப்பதாக, அரசியல் வட்டாரங்கள் பேச்சு அடிபடுகிறது.