ADDED : அக் 30, 2024 09:12 PM

புதுடில்லி: கிழக்கு லடாக் எல்லையில், இந்திய- சீன ராணுவத்தினர், படைகளை வாபஸ் வாங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. நாளை தீபாவளி இனிப்பு பரிமாற்றம் நடைபெற இருக்கிறது.
கிழக்கு லடாக்கில், 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.
சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. பதற்றம் காரணமாக, லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை, பல ஆயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு இருநாட்டு ராணுவத்தினரும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டது.
பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை இருநாட்டு அரசுகளும் தொடர்ந்து மேற்கொண்டன. ராணுவ அதிகாரிகள் தொடர் பேச்சு நடத்தி வந்தனர்.
அதன் பயனாக, சில நாட்களுக்கு முன் படைகள் ரோந்து செல்வது தொடர்பாக இருநாட்டு ராணுவத்தினர் இடையே உடன்பாடு ஏற்பட்டது. இரு தரப்பும் நேருக்கு நேர் சந்திக்கும் நிலையில் இருக்கும் படைகளை வாபஸ் பெற்றுக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
அதைதொடர்ந்து ரஷ்யாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரிக்ஸ் மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி சந்திப்பு நடந்தது. இந்த நிலையில், எல்லையில் படை குறைப்பு நிறைவு பெற்றுள்ளது.
ராணுவ வட்டாரங்கள் கூறுகையில்,'இந்தியா - சீனா இடையேயான ஒப்பந்தத்தின் கீழ், கிழக்கு லடாக்கின் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் படையினர் வாபஸ் பெறப்பட்டனர். இந்த பணி சுமுகமாக நடந்தது. படையினர் வாபஸ் பெறப்பட்டு பிந்தைய சரிபார்ப்பு செயலில் உள்ளது .
ரோந்து முறைகள் கீழ்மட்ட தளபதிகளுக்கு இடையே முடிவு செய்யப்பட உள்ளன. உள்ளூர் தளபதி மட்டத்தில் பேச்சுக்கள் தொடர்ந்து இறுதி செய்யப்படும்.
அதை தொடர்ந்து எல்லையில் அமைக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்புகள் உள்ளிட்டவைகள் அகற்றப்படும்.
2020 மே மாதத்துக்கு முன்பு இருந்ததுபோல், மீண்டும் எல்லையில் ரோந்துப் பணிகளில் ராணுவம் ஈடுபடும்,' இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாளை தீபாவளி திருவிழா நாள் என்பதால், இரு நாட்டு ராணுவத்தினர் இடையே இனிப்புகள் பரிமாற்றம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.