ADDED : பிப் 01, 2024 06:40 AM

கார்வார்: ஹிந்து மதத்தை சேர்ந்த தொழிலாளியை, கட்டாயப்படுத்தி கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயன்ற, மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹிந்து மதத்தை சேர்ந்த ஏழைகள், கூலி தொழிலாளர்கள், பழங்குடியின மக்களிடம் அதிக பணம் தருவதாக கூறி, ஒரு கும்பல் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதாக, கடந்த பா.ஜ., ஆட்சியில் ஏராளமான புகார்கள் எழுந்தன.
பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., கூலிகட்டி சேகரும், தனது தாயை சிலர் கட்டாயப்படுத்தியதாகவும், பின்னர் ஹிந்து மதத்திற்கு திரும்பி வந்தார் என்றும் கூறி இருந்தார்.
இதனால் பா.ஜ., ஆட்சியில், கர்நாடகாவில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ் கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கலாம்.
ஆனாலும் கர்நாடகாவில் இன்னும் சில இடங்களில் கட்டாய மதமாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்று, ஆறு பேர் போலீசில் சிக்கி உள்ளனர்.
உத்தர கன்னடாவின் ஷிர்சி தாலுகா, ஜகலமனே கிராமத்தில் வசிப்பவர் ஆதர்ஷ் நாயக். எஸ்.சி., சமூகத்தை சேர்ந்தவர். கூலி தொழில் செய்வதால், இவரது குடும்பம் கஷ்டத்தில் சிக்கி தவிக்கிறது.
இந்நிலையில் ஆதர்ஷ் நாயக் வீட்டிற்கு நேற்று முன்தினம், ஆறு பேர் கும்பல் சென்றது.
'உங்கள் பொருளாதார நிலை மேம்பட வேண்டும் என்றால், கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசு உங்களுக்கு அனைத்தையும் தருவார். உங்கள் கஷ்டங்கள் தீர்ந்து போகும்' என்று கூறி, கட்டாயப்படுத்தி மத மாற்றம் செய்ய முயன்று உள்ளனர்.
ஆனால் இதற்கு ஒப்புக்கொள்ளாத, ஆதர்ஷ், ஷிர்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், மூன்று பெண்கள் உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ஹாவேரியின் பரமேஸ்வர் நாயக், சுனிதா நாயக், தனஞ்ஜெய், ஷாலினி ராணி, உத்தர கன்னடாவின் முண்டுகோடின் குமார் லமானி, தாரா லமானி என்பது தெரிந்தது. ஆறு பேரிடமும் விசாரணை நடக்கிறது.